நீங்கள் புற்று நோய்க்குப் பயப்படுகிறீர்களா? DO YOU FEAR CANCER? வில்லியம் மரியன் பிரான்ஹாம் 1. ஒரு சகோதரனின் சாட்சி கிறிஸ்துவுக்குள்ளான ஒரு சகோதரன், ஏழாம் சபையின் தூதன் சகோ. வில்லியம் பிரன்ஹாமின் ஊழியத்தைக் குறித்துப் பின்வருமாறு எழுதியிருக்கின்றார். மருத்துவர்களிடத்தில் கேன்சருக்கான (புற்றுநோய்) எந்தச் சிகிச்சையும் இல்லை. ஆனால் கர்த்தருடைய சமூகத்தில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு தூதன் (THE ANGEL OF THE LORD) சகோதரர் பிரன்ஹாமிற்கு (William Branham) எந்த ஒரு நோயாளியையும் குணப்படுத்தக்கூடிய ஒரு தவறாத மருந்தை வழங்கியுள்ளார். தூதனின் வார்த்தைகளைக் கேளுங்கள். "நீ ஜனங்களை விசுவாசிக்கச் செய்யக் கூடுமானால் எதுவும் உன் முன் நிற்க முடியாது. புற்றுநோய் கூட நிலைநிற்க முடியாது” (NOT EVEN CANCER). இந்த மூன்று ஆண்டுகளாக இந்த தேசத்திலே நான் சகோதரர் பிரன்ஹாமின் கூட்டங்களில் இருந்தபோது, சகோதரர் பிரன்ஹாமின் ஊழியத்தின் மூலம் பெரும்பாலும் புற்றுநோய் என்பது ஒரு தோற்றுப்போன பிசாசு என்பதை நான் கவனித்தேன். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலருக்குச் சகோதரர் பிரன்ஹாமின் ஊழியத்தின் மூலம் அந்நோய் முறியடிக்கப் பட்டது. மற்ற எந்த நோயையும் விட புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிக அதிகமாக குணமடைந்தார்கள். நான் இதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் புற்றுநோய் உக்கிரமாகப் பரவி வருகிறது, ஆனால் மருத்துவர்களிடம் இதற்கு இன்னும் தீர்வு இல்லை. ஜெபத்திற்கென்று அழைக்கப்படுபவர்களில் பலர் வலுவாகவும் நன்றாகவும் இருக்கிறார்கள், மேலும் அவர்களுக்கு ஜெப அட்டை தேவையில்லை என்று ஒருவர் யூகிக்கலாம். மற்றவர்கள் சக்கர நாற்காலிகளில் அமர்ந்திருக்கிறார்கள், அல்லது கட்டில்களில் இருக்கிறார்கள்; அவர்களின் வரிசை எண் இன்னும் அழைக்கப்படவில்லை. ஆனால், அவர்கள் கர்த்தருடைய தூதனுக்கு (THE ANGEL OF THE LORD) முன்பாக நிற்கும்போது அது ஒருபோதும் தவறியதாக நான் காணவில்லை. மரணத்தின் இருண்ட நிழல் அந்த நபரைப் பின்தொடர்கிறது மற்றும் புற்றுநோய் அவரது உயிரைப் பறித்துக் கொண்டிருக்கிறது என்றும் வெளிப்படுத்தப்படுகிறது. விரைவில் இறக்கப் போகிறவர்களுக்கு மெய்யாகவே கர்த்தர் நல்லவராக இருந்து அவர்கள் முற்றிலும் விடுதலையடையும்படி அவர்களை வழி நடத்துகிறார். என் அன்பு நண்பரே உங்களுக்குப் புற்றுநோய் இருந்தால் அல்லது அதைப்பற்றி பயம் இருந்தால், தேவனால் கொடுக்கப்பட்ட சுகம் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். பெரும்பாலும் நாம் நோய்வாய்ப்பட்டாலும் அல்லது வேறு ஏதேனும் ஒன்றாக இருந்தாலும் நாம் அதற்குப் பலியாவதற்கு அதைக்குறித்த பயமே காரணமாயிருக்கிறது. இதுபோன்ற விஷயங்களுக்குப் பயப்படவோ அல்லது நம் மனதைச் செலுத்தவோ வேண்டாம் என்று தேவனுடைய வார்த்தை சொல்லுகிறது. புற்றுநோயைப் பற்றிய ஒரு பெயர்பெற்ற கட்டுரையை நான் சமீபத்தில் லைப் இதழில் (Life Magazine) படித்தேன். அதிக வலி வேதனையைத் தரக்கூடிய, இதயச்சிக்கல் மற்றும் மூட்டுவலியைவிட புற்றுநோயைக் கண்டு ஜனங்கள் எவ்வாறு அஞ்சுகிறார்கள் என்பதை ஒரு மருத்துவ நிபுணர் கூறினார். புற்றுநோயைப் பற்றிய பயம் அமெரிக்க ஜனங்களை எந்த அளவிற்கு மூழ்கடித்தது என்பதை அவரது கருத்து வெளிப்படுத்துகிறது. பல ஜனங்கள் பாதிக்கப்பட்டதற்கு இது காரணமாகிறது. கவலைப்படுவதன்மூலம் அவர்கள் தங்கள் நரம்பு மண்டலம் மற்றும் தங்கள் மற்ற சரீர அவயங்களை மறைமுகமாகக் காயப்படுத்துகின்றனர். நிச்சயமாக பயம் என்பது புற்றுநோய்க்குப் பின்னால் ஒரு தூண்டுதல் சக்தியாகக் காணப்படுகிறது என்று ஒரு மருத்துவ நிபுணர் நியாயப்படுத்த முடியுமென்றால், கிறிஸ்தவர்களாகிய நாம் பயப்படக்கூடாது (DO NOT FEAR) என்பதை இன்னும் அதிகமாக உணர்ந்து, தேவனுடைய நன்மை மற்றும் கிருபைக்காக அவரைத் துதித்து, அவருடைய நன்மைகளை எண்ணி, நம் மனதை தேவன் மேலுள்ள நம்பிக்கை மற்றும் அன்பில் நிலை நிறுத்த வேண்டும். உங்களுக்கான தேவனுடைய விடுதலையின் திட்டத்தின் வெற்றியைக்காண உங்களுக்கு உதவும்படி ஹெரால்ட் ஆப் ஃபெய்த் (Herald Of Faith) என்ற பத்திரிக்கையில் உள்ள படங்களையும் சாட்சிகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அந்த நபர்களிடம் சுகம் பெற்றதைப் பற்றி கேட்கும்படி அவர்களைக் கடிதம் மூலம் தொடர்பு கொள்ளத் தயங்க வேண்டாம், அவர்கள் உங்களுக்குப் பதில் எழுதுவதில் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்கள் மரிக்காமல் எத்தனை வருடங்கள் உயிரோடு இருக்க அனுமதிக்கப்பட்டார்கள் என்று நீங்கள் காணும்போது அது உங்கள் இருதயங்களை ஊக்குவிக்கும். தம்முடைய ஊழியக்காரரான சகோதரர் பிரன்ஹாம் மூலம் அவர் செய்து வரும் பணிக்கு தேவனுக்கு மகிமை செலுத்துங்கள். இந்த நோயால் அவதிப்படும் எவரையாகிலும் நீங்கள் அறிந்திருந்தால் அவர்களுக்குச் சாட்சி கொடுத்து, தேவன் செய்த அற்புதமான காரியங்களை அவர்களுக்குச் சொல்லுங்கள். 2. சகோதரி வில்மா பாகி குடும்பத்தில் அற்புதம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின்படி சகோதரர் பிரன்ஹாம் பீனிக்ஸ் (Phoenix) நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்குள் நுழைந்து காசநோயால் இறந்து கொண்டிருக்கும் வில்மா பாகிக்காக (Wilma Baghy) ஜெபம் செய்தார். வில்மா பாகி ஜீவனைப்பெற்று, தேவனுடைய வல்லமையால் முழுமையாகச் சுகம் பெற்றுக் கொண்டார். ஆனால் இது வில்மா பாகி மீது தேவன் பொழியும் ஆசீர்வாதங்களின் ஆரம்பமே. சில நாட்களுக்குப் பின் அவரது கணவர் வயிற்றில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்தார். சிறிது நேரம் கழித்து அவளது மார்பில் ஏற்பட்ட வலிகள் விலா எலும்புகளிலும் உடலிலும் பரவி புற்றுநோயை வெளிப்படுத்தின. வில்மா பாகிக்கு அது மிகவும் இருளான வேளையாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எதிரி இன்னும் கடுமையாகத் தாக்கினான். அவளது ஆறு வயது சிறுமியின் உடல்நிலை சரியில்லாமல் போனது, காலப்போக்கில் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. "உங்கள் மகளுக்கு இரத்தப் புற்றுநோய் உள்ளது, மேலும் அவள் நீண்ட காலம் வாழ முடியாது” என்று மருத்துவர்கள் சொன்னார்கள். அந்தோ பரிதாபம்! மனிதகுலத்தின் பொல்லாத உயிர்க்கொல்லி நோயில் சிக்கித் தவிக்கும் ஒரு தாய், ஒரு தந்தை மற்றும் ஒரு மகள். இரண்டு வருடங்களுக்கு முன்பு சகோதரர் பிரன்ஹாம் பீனிக்ஸ் நகருக்கு வந்தார். மிகவும் நோய்வாய்ப்பட்ட வில்மா பாகி அந்தக் கூட்டத்திற்கு வந்து, அவளது ஜெப அட்டை வரிசை எண் அழைக்கப்பட்டதால் அவர் முன் நின்றாள். அன்றிரவு சகோதரர் பிரன்ஹாம் அவளது உடல்நிலை குறித்தும் மகளின் நோய் குறித்தும், கணவரின் உடல்நிலை குறித்தும் தீர்க்கமாகக் கூறினார். தேவன் தம்முடைய ஆசீர்வாதங்களை வானத்திலிருந்து வருஷிக்கச் செய்தார், மூவரும் சுகமடைந்தனர். சிறிது நேரத்திற்கு முன்பு வில்மா பாகி மற்றும் அவளது சிறிய மகளுடன் பேசும்படி எனக்குக் கிடைத்த வாய்ப்பை பாக்கியமாக எண்ணுகிறேன். அவர்கள் இருவரும் ஆரோக்கியத்திற்கான சாட்சியாகவே காட்சியளித்தனர். மேலும், அவளது கணவரும் கூட முழுமையாக குணமாகி விட்டதாக என்னிடம் கூறினாள். அவளிடம் தொடர்பு கொண்டு விசாரியுங்கள். தேவனுடைய தீர்க்கதரிசியின் ஜெபத்தை அவள் எப்படி ஏற்றுக்கொண்டு முழுமையாகச் சுகமடைந்தாள் என்பதை அவள் மகிழ்ச்சியுடன் உங்களுக்குக் கூறுவாள். அவளது முகவரி : திருமதி. வில்மா பாகி, 1407, தெற்கு 21 பி.எல். பீனிக்ஸ், அரிசோனா. 3. சகோதரி ஹேட்டி வால்ட்ராப்பின் அனுபவம் அரிசோனாவின் ஃபீனிக்ஸ், 1701 கிழக்கு க்ளென்டேல் அவென்யூவிலுள்ள (Glendale Avenue) ஹேட்டி வால்ட்ராப்பின் (Hatie Waldrop) கதை பின்வருமாறு: அவள் அதை என்னிடம் கூறியபோது, அது என் இதயத்தை விசுவாசத்தினாலும் தைரியத்தினாலும் நிரப்பியது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அதைப் படிக்கும்போது அது உங்கள் இருதயத்திற்குச் சமாதானத்தையும் வெற்றியின் பிரசன்னத்தையும் தரும். நம்முடைய கர்த்தரின் நாமத்தில் நான் உங்களை வாழ்த்த விரும்புகிறேன். பத்து ஆண்டுகளுக்கு முன்பு கனம்பொருந்திய பிரன்ஹாமின் கூட்டத்தில் நான் ஒரு கட்டிலில் மரிக்குந் தருவாயில் இருந்தபோது, நான் வியாதியிலிருந்து பெற்ற சுகத்தைப் பற்றி உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். என்னுடைய இந்த முயற்சி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எந்த ஒருவருக்கும் அது உதவியாக இருக்கும். 26 ஆண்டுகளாக, இடுப்புக்கு மேலே, என் வலது பக்கத்தில் அவ்வப்போது எனக்கு வலி ஏற்பட்டது. 1957ஆம் ஆண்டில், உணவு அல்லது தண்ணீரை உடலில் தக்கவைத்துக் கொள்ள முடியாதபோது நான் மயங்கி கீழே விழத் தொடங்கினேன். இது பின்னர் வியாதிக்கு முரணாகக் காணப்படுவது போல் என் பசியைப் பூர்த்தி செய்யமுடியாமல் எல்லா நேரமும் சாப்பிட்டுக்கொண்டே இருந்தேன். ஒருநாள் உள்ளுர் நாளிதழில் ஒரு குறிப்பிட்ட மருத்துவர் அளித்திருந்த ஒரு விளம்பரத்தை நான் பார்த்தேன். அதில் ஐந்து டாலர் (5$) என்ற குறைந்த கட்டணத்திற்குத் தலை முதல் பாதம் வரை பரிசோதிக்கக் கூடிய ஃப்ளோரோஸ்கோப் (Fluoroscope) சோதனை எடுப்பதாக விளம்பரம் அளிக்கப் பட்டிருந்தது. என் கணவர் அந்த மருத்துவரிடம் சென்று வரும்படிக் கூறினார். ஒருவேளை அது என் நோயின் தன்மையைக்கண்டறிய உதவும் என்றார். எனவே திங்கட் கிழமையன்று நான் ஃப்ளோரோஸ்கோப்பிற்காக மருத்துவமனைக்குச் சென்றேன். மருத்துவர் கண்டறிந்த விஷயத்தால் அவர் மகிழ்ச்சிய டையவில்லை, மறுநாள் அதிகாலையில் என் கணவரை அழைத்து வரச் சொன்னார். நாங்கள் மறுநாள் காலை பத்து மணிக்கு வந்தோம், எனக்குக் கடுமையான பெருங்குடல் அழற்சி (Acute Colitis) இருப்பதாக மருத்துவர் கூறினார். ஆறு சிகிச்சைகள் அளிப்பதன் மூலம் எனக்குச் சுகம் கிடைக்கும் என்று அவர் கூறினார். நாங்கள் சம்மதித்தோம். சிகிச்சைக்காக என் உடல் உஷ்ணத்தைவிட சற்று அதிக சூடான நீரை என் பெருங்குடல் வழியாக ஒரு மணி நேரம் மற்றும் சில சமயங்களில் அதற்கும் அதிகமாகச் செலுத்துவார்கள். இரண்டாவது வாரத்தின் இறுதியில் நான் மேஜையின்மீது மயங்கி விழுந்தேன், மருத்துவரும் செவிலியரும் என்னை விழிக்கச் செய்தபோது "எனக்குப் புற்றுநோய் இருக்கிறதா? என்று அவர்களைக் கேட்டேன். மருத்துவர், ஆம் பரிதாபமான பெண்ணே, சிகிச்சைக்கு வர ஏன் இவ்வளவு காலதாமதம் செய்தாய்?”என்றார். மருத்துவர் இதைக் கண்டுபிடித்தபோது அவர் எனக்கு இன்னொரு எக்ஸ்ரே (X-Ray) எடுத்தார். அது என் வலது பக்கத்தின்மேல் பெருங்குடல் நூல்களைப்போலத் தொங்கிக் கொண்டிருப்பதைக் காட்டியது. என்னைப் பார்க்க மற்றொரு மருத்துவர் வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் என்னை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார் என்று நான் அஞ்சியதால் நான் மறுத்துவிட்டேன். ஏனெனில் நான் அங்கு செல்ல விரும்பவில்லை. அப்போது அவர் என்னிடம் என் கீழ்வயிற்றை அறுவைசிகிச்சை செய்து அகற்றக்கூடிய மருத்துவர்கள் ஊரில் இருக்கிறார்கள். ஆனால், அப்படி செய்யும் பட்சத்தில் நான் இருபது நாட்களில் இறந்து விடுவேன் என்று சொன்னார். ஆகவே, வீட்டுக்குச் சென்று காத்திருப்பதைவிட என்னால் வேறு எதையும் செய்ய முடியவில்லை. நான் நாளுக்கு நாள் பலவீனமடைந்து நலிவுற்றேன், நாட்கள் அதிகரிக்க வலியும் அதிகரித்தது. வலியைப் போக்க வீரியமிக்க வலிநிவாரண மாத்திரைகள் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் ஓ, இயேசுவுக்கும், அந்த இருண்ட வேதனையான நாட்களில் என்னுடன் சேர்ந்து எனக்காக ஜெபித்த பரிசுத்தவான்களுக்கும் நன்றி, அவர்கள் எவ்வளவாய் என்னுடன் கூட நின்றார்கள். நான் மிகவும் தளர்ந்து இருந்தபோது, இரவு நேரங்களில் என்னுடன் எவ்வளவாய்த் தங்கினார்கள். வலிமையான மயக்க நிலையின் விளைவுகளுக்கு என் இதயம் எதிர்வினையாற்றத் தொடங்கும்வரை மருத்துவர் வலிநிவாரண மாத்திரைகளை அதிகரித்தார். பின்னர் அதிக அளவு நச்சுத்தன்மையைத் தாங்கும்படி, இதய மருந்து எடுக்க வேண்டியிருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை கர்த்தருக்குள் இருக்கும் ஒரு சகோதரி, எங்கள் சிறிய வீட்டுக்கு வந்தாள். அவள் சபையில் எல்லாரும் அழைப்பது போல என்னை மா(Ma) என்று அழைத்தாள். சகோதரர் பிரன்ஹாம் நகரத்துக்கு வருகைதரும் செய்தியை அவள் அறிவித்ததோடு தேவன் அவருக்குக் கொடுத்த சுகமளிக்கும் வரத்தைப் பற்றியும், அவர் எப்படி நோயுற்றவர்களுக்காக ஜெபிக்கிறார் என்பதைப் பற்றியும் என்னிடம் கூறினாள். "அவர் பீனிக்ஸ் நகருக்கு வருகிறார் நீங்கள் குணமடையப் போகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். அவர் இங்கு வரும் வரை இன்னும் 11 நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்”. இவை என் தோழியின் மன்றாட்டு வார்த்தைகள். அடுத்த மோசமான தாக்குதல் ஆபத்தானது என்றும் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர், என் கணவரிடம் கூறியிருந்தார். இதை நான் அறிந்திருந்தேன். பதினோரு நீண்ட நாட்களுக்குப் பிறகு சகோதரர் பிரன்ஹாம், சகோதரர் அவுட்லா (Brother Outlaw) என்பவரின் சபையில் தனது கூட்டங்களைத் தொடங்கினார். முதல் ஆராதனை மார்ச் 2,1947 அன்று நடைபெற்றது. சிறிய சபை நிரம்பியிருந்தது. அதனால் அவர்கள் கூட்டத்தை ஒரு பெரிய இடத்திற்கு மாற்றவேண்டியிருந்தது. நான் ஞாயிற்றுக்கிழமை இரவு கூட்டத்திற்குச் சென்றேன். எனக்கு முன்னால் பலர் ஜெபிக்க இருந்தனர். அதனால் நான் அழைக்கப்படவில்லை. அடுத்த நாள் இரவும் நான் அழைக்கப்படவில்லை. ஆனால் சகோதரர் பிரன்ஹாம் செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு நோய்வாய்ப்பட்டவர்களுக்காக ஜெபிப்பதாகக் கூறினார். செவ்வாய்கிழமை அதிகாலையில் நான் சமையலறையில் இருக்கும்போது ஒரு சத்தம் என்னிடம் சொன்னது, உன் ஜீவனுக்காக ஓடு, என்றது. எங்களுடன் இரவைக் கழித்த ஒரு சகோதரியை நான் அழைத்து. "நாம் துரிதமாகச் செல்ல வேண்டும், என்று சொன்னேன். நாங்கள் சபைக்கு ஓட ஆரம்பித்தோம். என்னுடைய நிலையில் என்னால் வெகு தூரம் ஓட முடியவில்லை, இயேசுவுக்கும் இது தெரியும். ஆகவே, நாங்கள் முற்றத்தில் இருந்து வெளியே வந்தபோது கர்த்தருக்குள் ஒரு சகோதரனும் சகோதரியும் தங்கள் காரில் ஏற்றி எங்களைச் சபைக்கு அழைத்துச் சென்றனர். சுமார் 8.30 மணியளவில் நாங்கள் சபைக்குள் நுழைந்தோம், சகோதரர் அவுட்லா என்னை வாழ்த்தி, வலது பக்கம் செல்லுங்கள், சகோதரி வால்ட்ராப், இந்தக் காலையில் உங்களுக்காகத் தான் முதலில் ஜெபிக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார். நான் வேறு ஒன்றும் பேசாமல் தாமதமின்றி முன்நோக்கி விரைந்தேன். அங்கே, உட்கார்ந் திருக்கும்போது ஒரு உதவியாளர் என்னிடம் வந்து நான் பார்வையற்றவரா? என்று கேட்டார். நான் இல்லை என்று பதிலளித்தேன். பின்னர் அவர் வருந்துவதாகக் கூறினார். ஏனெனில் முன் இருக்கைகள் பார்வையற்றவர்களுக்காக மட்டுமே இருப்பதால் நான் நான்கு வரிசைகளுக்குப் பின்னால் நகர்ந்து சென்று அமர வேண்டியதாயிருந்தது. அவர் பேசும்போது என் வயிற்றில் புற்றுநோய் உருண்டதை என்னால் உணர முடிந்தது. உதவியாளர் வெளியேறும்போது நான் வழியின் குறுக்கே செல்ல முயன்றேன். ஆனால் முடியவில்லை. அவர் திரும்பி வந்து நான் மூச்சுத்திணறிக் கொண்டிருப்பதைக் கண்டார். நான் என்னைப் பின் அறைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றேன். மன்னிக்கவும் சகோதரி, அது என்னால் முடியாது என்று அவர் கூறினார். சகோதரர் அவுட்லாவை அழைத்து வாருங்கள் என்று கூறி நான் அவரை அனுப்பினேன். சகோதரர் அட்லாவும் வேறு சில சகோதரிகளும் என்னிடம் வந்து, "நீங்கள் பதற்றமாக இருக்கிறீர்கள், சகோதரி வால்ட்ராப். நாங்கள் உங்களுக்காக ஜெபிப்போம்” என்று கூறினார். அப்போது என்னுடன் வந்த சகோதரி இது பதற்றம் அல்ல, மரணம்” என்றார். அப்போதே சகோதரர் ஹூப்பர் (Brother Hooper) மற்றும் சகோதரி மெக்டானியல் (Sister McDaniel) ஆகியோர் வந்து, சகோதரர் அவுட்லாவிடம் இது மிகவும் ஆபத்தான நிலை என்றும், ஒரு கட்டிலைக்கொண்டு வரும்படிக் கூறினார். வேறு ஒருவர் சகோதரர் பிரன்ஹாமை அழைக்கும்படி பின் அறைக்கு ஓடினார். என்ன நடக்கிறது என்பதை நான் கேட்க முடிந்தது, ஆனால் பேச முடியவில்லை. மேலும், என்னை இருள் மூடிக்கொண்டிருந்தது. சகோதரர் பிரன்ஹாம் விரைவாக வந்து மைக்ரோஃபோனுக்குச் சென்று, சகோதரி புற்றுநோயால் மரித்துக்கொண்டு இருப்பதால் அனைவரையும் மிகவும் பயபக்தியுடன் இருக்கச் சொன்னார். பின்னர் சகோதரர் பிரன்ஹாம் என்னிடம் திரும்பி, என்னைப்பார் சகோதரி, என்று கூறினார். அவரது வார்த்தைகள் எனக்கு மெல்லிய சத்தத்தைப் போல மெதுவாகக் கேட்டன; ஆனால் அடர்ந்த இருள் நீங்கும் வரை அவர் அவற்றைச் சொல்லிக்கொண்டே இருந்தார். பின்னர் அவர், தூதன் அவரிடம் வந்ததாக நான் நம்புகிறேனா? என்று என்னிடம் கேட்டார். என்னால் பேச முடியவில்லை, அதே சமயம் நான் அவரை நம்புகிறேன் என்பதை அவர் உணர்ந்தார். அப்போது அவர் "கர்த்தருக்கு நன்றி, சகோதரி, உங்கள் விசுவாசம் உங்களை இரட்சித்தது.”என்றார். அவர் முதன் முதலில் ஜெபித்தபோது நான் ஒரு விஷயத்தையும் உணரவில்லை, பின்னர் அவர் மீண்டும் ஜெபம் செய்தபோது ஒரு சூடான உணர்வு என் மீது படர்ந்தது. என் தலையிலிருந்து தொடங்கி வெளியேயும் உள்ளேயும் உடலில் பாய்ந்தது. ஒவ்வொரு வலியும் என் உடலை விட்டு வெளியேறியது. நான் கட்டிலில் இருந்து எழுந்தேன். புற்றுநோய் என் உடலைவிட்டு விலகியதால் மிகவும் பாதிக்கப்படுவேன் என்றும் 72 மணி நேரத்துக்கு நான் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பேன் என்றும் சகோதரர் பிரன்ஹாம் என்னிடம் கூறினார். அதன் ஒவ்வொரு வேரும் மரித்துவிட்டது என்று அவர் கூறினார். மேலும், அவர் மருத்துவரின் அறிவுரைப்படி திரவ உணவை மட்டுமே சாப்பிடுவது நல்லது என்று கூறினார். திடப்பொருட்களை எப்போது சாப்பிட வேண்டும் என்று இயேசு எனக்குத் தெரிவிப்பார் என்றும் திடமான உணவை உட்கொள்ளும் பட்சத்தில் நான் மரிக்க நேரிடும் என்றும் அவர் கூறியிருந்தார். நான் கண்ணீரில் உறைந்துபோகும் வரை 72 மணி நேரம் வலியால் அவதிப்பட்டேன். தூங்கிக்கொண்டிருந்த என் கணவரை அழைக்க முயற்சிப்பேன். ஆனால் வலி மிகவும் தீவிரமாக இருந்ததால் என்னால் பேச முடியவில்லை. ஆகவே வலியைத் தாங்கும் பெலன் எனக்குக் கிடைக்கும் படி ஜெபிக்கக்கூறி அவருக்கு அருகில் ஊர்ந்து வந்தேன். பின்னர் வலி சில மணிநேரங்களுக்கு என்னை விட்டு நீங்கியது. என்னால் சற்று ஓய்வெடுக்க முடிந்தது. இது நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை நீடித்தது. ஆனால் வலி ஒவ்வொரு முறையும் படிப்படியாகக் குறைந்து கொண்டிருந்தது. இறுதியாக நான் மருத்துவரை அழைத்து, “அவர் என் வயிற்றை எக்ஸ்ரே செய்வாரா? என்று கேட்டேன். அவர் அதற்குச் சம்மதம் தெரிவித்தார். எக்ஸ்ரே என் பெருங்குடலைக் காட்டியது, மற்றும் அனைத்து உறுப்புகளும் இருக்கவேண்டிய சரியான இடத்தில் இருந்தது. நச்சுத்தன்மை நிறைந்த மருந்துகளின் விளைவாக வீங்கியிருந்த என் இதயம் இயல்பான வடிவத்திற்குத் திரும்பியது. என் கல்லீரலில் எனது கட்டை விரல் அளவுக்கு இருந்த பெரிய கற்கள் மறைந்து போய்விட்டன. அன்று இரவு உணவாக, பிண்டோ பீன்ஸ், வெங்காயம், ஊறுகாய், வறுத்த மாட்டிறைச்சி மற்றும் ஆப்பிள் கோப்லர் (Apple Cobbler) ஆகியவற்றை நான் எடுத்துக்கொண்டேன். அடுத்தநாள் நான் எக்ஸ்ரேக்களைப் பார்க்க வேண்டியிருந்தது. ஆனால் நான் சாப்பிடலாம் என்று இயேசு கூறிவிட்டார். ஆகவே அதை நான் செய்தேன். இவை அனைத்தும் நடந்தேறி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் நான் நல்ல பரிபூரண சுகத்துடன் இருக்கிறேன். உங்களுக்குப் புற்றுநோய் இருந்தால், ஜெபம் ஏறெடுக்கப்பட்ட பின்பும் வலி இன்னும் தொடர்ந்தால், உங்கள் சரீர சுகத்திற்காக தேவனைத் துதித்துக் கொண்டே இருங்கள். பிசாசு உங்கள் சுகத்தைத் திருட முயற்சிப்பான். ஆனால் இயேசுவைத் துதித்து, அவரை நோக்கிப் பார்த்துக் கொண்டே இருங்கள். சகோதரர் பிரன்ஹாம் எனக்காக ஜெபித்த பிறகு. நான் ஒருபோதும் படுக்கையில் கிடந்ததில்லை, சபை கூடுதலையும் தவறவிட்டதில்லை. நான் சுகமடைந்த அதே நேரத்தில், என் ஆறு வயது பேரன் மார்வினுக்கும் ஜெபம் ஏறெடுக்கப்பட்டு, அவனது தொண்டைக்குள் இருந்த தைராய்டு கட்டியிலிருந்து சுகம் பெற்றுக்கொண்டான். இன்று அவனுக்கு 16 வயதாகிறது. பரிபூரண சுகத்துடன் இருக்கிறான். உங்கள் சரீர சுகத்திற்காக நீங்கள் தேவனை நம்புவீர்களானால், என்னைத் தொடர்பு கொள்ளும்படி நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன், என்னால் முடிந்தவரை உங்களை ஊக்குவிப்பதில் மகிழ்ச்சி அடைவேன். 4. லாரா வாக்கரின் சாட்சி மிச்சிகன் (Michigan) நகரத்தில் ஹெஸல் (Hessel) என்ற இடத்தில் உள்ள கனம்பொருந்திய லாரா வாக்கர் (Rev. Laura Walker) என்பவரின் சாட்சி பின்வருமாறு : ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நான் குடல் புற்றுநோயால் மரித்துக் கொண்டிருந்தேன். குடலுக்கு எந்த உணர்வும் இல்லாமல் உயிரற்றதாகக் காணப்பட்டது. சில சமயங்களில் அடிவயிற்றின் கீழ்ப்பகுதி கல்போன்று பாரமாகவும் வயிற்றுப்பகுதியின் உள்ளேயும் வெளியேயும் குளிர்ந்து இருப்பதாகவும் உணர்ந்தேன். எனிமாக்களால் மட்டுமே அவைகளை நீக்க முடியும். வீக்கம் மற்றும் வலிவேதனை மிகவும் கடுமையாக இருந்ததால் சில நாட்கள் நிவாரணத்திற்கு அதிக எனிமாக்கள் தேவைப்பட்டன. ஆகஸ்ட் 1951ல் சகோதரர் பிரன்ஹாம் பென்சில் வேனியாவில் ஈரி (Erie, Pennsylvania) என்ற இடத்தில் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார். தேவன் என்னிடம் உன்னைச் "அந்தக் கூட்டத்திற்குச் செல். நான் சுகமாக்குவேன்” என்று கூறினார். அந்த நேரத்தில் நாங்கள் மிச்சிகனில் உள்ள போர்ட் ஹீரோனில் வசித்து வந்தோம். அது அந்த இடத்திலிருந்து பல நூறு மைல் தொலைவில் இருந்தது. நான் செல்வது கிட்டதட்ட சாத்தியமல்ல எனத்தோன்றியது. ஆனால் தேவன் ஒரு வழியையும் அங்கு செல்வதற்கு பெலத்தையும் அருளினார். இந்த நேரத்தில் சகோதரர் பிரன்ஹாம் தனது கையில் இருந்த அடையாளத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். அவர் எனக்குப் புற்றுநோய் இருப்பதாகச் சொன்னார். பின்னர் எனக்காக ஜெபித்தார். பின்னர் அவர் என்னிடம் திரும்பி, "மகளே உன்னுடைய விசுவாசம் உன்னை முழுமையாகச் சுகமடையச் செய்தது" என்று கூறினார். அந்த நேரத்தில் நான் எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் உணரவில்லை. ஆனால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு எனக்குள்ளிருந்து எதோ ஒன்று வெளியே விழுந்ததைப்போல் உணர்ந்தேன். அன்றிலிருந்து இன்று வரை நான் பரிபூரணமான சுகத்துடன் இருக்கிறேன். என் அற்புதமான ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவுக்குத் துதி உண்டாவதாக. நான் சுகமடைந்தேன் என்பதற்குப் பல குறிப்புகள் வழங்க முடியும். 5.செய்தியை அறிவிப்பவர் நீங்களாகக்கூட இருக்கலாம் (திருமதி. எக்கன்பர்க்கின் சாட்சி) நீங்கள் எப்போதாவது உங்களை தேவனுடைய ஊழியராக நினைத்திருக்கிறீர்களா? அல்லது ஒரு மூப்பராக இருந்து நோயுற்றவர்களின் மீது கை வைக்க விரும்பியிருக் கிறீர்களா? அல்லது கர்த்தருடைய வார்த்தையைப் பிரசங்கிக்க உங்கள் இருதயம் கொழுந்துவிட்டு எரிகிறதா? இன்று ஒருவேளை, நீங்கள் சுவிசேஷத்தை தேசங்கள் முழுவதும் கொண்டு செல்லமுடியாமல் இருக்கலாம். அல்லது ஜனங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க விசுவாச ஜெபம் உங்களிடம் இல்லாமல் இருக்கலாம். நீங்கள் வரம் பெற்றவராகவோ அல்லது சுகமாக்குதல், அற்புதங்கள் செய்தல், தீர்க்கதரிசனம் உரைத்தல் போன்ற ஆவிக்குரிய வரங்களை வெளிப்படுத்தும் ஒரு திறமையான நபராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் செய்யக்கூடிய ஒன்று உள்ளது. தேவன் உங்களை அதைச் செய்யும்படிச் சொல்லியிருக்கிறார். ஒரு வேளை நீங்கள் அதை கவனிக்காமல் இருக்கலாம். ஆனால் கர்த்தருடைய வார்த்தையில் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஊழியம் உண்டு. இழக்கப்பட்ட ஆத்மாவுக்கு இரக்கத்தின் தூதனாகக்கூட (Angel of Mercy) நீங்கள் இருக்கக்கூடும். மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டு வரும் நபராக நீங்கள் இருக்கக்கூடும். நீங்கள் வேறு ஒரு நபரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய நபராக இருக்க முடியும். அது எந்தப் புத்தகத்திலும் பதிவு செய்யப்படக் கூடிய மிகப்பெரிய ஆசீர்வாதமாகக் கருதப்படும் அத்தகைய நபரின் உண்மையான கதையை அடுத்த சில வினாடிகளில் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் கூட ஒரு கிருபையின் தூதனாக இருக்கலாம். அவருக்குச் சாட்சியாக இருந்து நற்செய்தி அறிவிப்பது உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான பங்காகும். எங்கள் கதை திருமதி. எக்கன்பர்க்குடன் (Mrs.Eckenburg) தொடங்குகிறது. அவள் தனது கணவரிடம் விடைபெற்று பேருந்தில் ஏறினாள். இந்தப் பயணத்தில் அவளது கணவர் அவளுடன் செல்ல முடியாது. ஏனெனில் அவர் தனது வேலையில் நீண்ட நாட்களுக்கு விடுப்பு எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கும். மேலும் அந்தச் செலவை அவர்களால் ஈடுகட்ட இயலாது. எக்கன்பர்க்கும் அவளது கணவரும் சுமார் 50 வயதுடைய தம்பதிகளாக இருந்தார்கள். அவர்களுக்குத் தங்கள் வருமானத்திற்குட்பட்ட ஒரு எளிமையான வீடும் ஒரு எளிய வாழ்க்கை முறையும் இருந்தது. ஆனால் அவர்கள் அநேக ஆண்டுகளாக ஒருமனப்பட்டு வாழ்ந்து பல விஷயங்களைச் சந்தோஷமாய் அனுபவித்திருக்கிறார்கள். அவர்கள் அவ்விதமாய் வாழ எல்லோரையும் போல வேலை செய்ய வேண்டியதாயிருந்தது; பெரும்பாலும் அது கடினமாக இருந்தது; சில நேரங்களில் சற்று எளிதாகவும் இருக்கும். இப்போது பேருந்து அவள் அறியாத அல்லது அவள் எதிர்பார்க்காத ஒரு இடத்திற்கு அவளை அழைத்துச் சென்றது. அவளது வியாதிக்காக, சான்பிரான்சிஸ்கோ ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் (San Francisco Standford University) முதல்முறையாக சிகிச்சை பெற்று கொஞ்ச நாட்கள் ஆகியிருந்தது. இங்குதான் அவள் ஜூன் 1955ல் பரிசோதனைக்காகப் பயன்படுத்தப்படும் நோயாளியாக இருந்தாள். எக்கன்பர்க் தம்பதியர்கள் மற்ற சிகிச்சைகள் அல்லது மருத்துவருக்குச் செலுத்துவதற்கான செலவை ஈடுகட்ட முடியாததால் இந்தச் சிகிச்சையைத் தேர்வு செய்தனர். இங்கே அனைத்துச் சிகிச்சையும் ஏழைகளுக்கு இலவசம், மற்றும் சிறந்த மருத்துவர்கள் அவளுக்குச் சிகிச்சை அளிப்பார்கள். அவள் ஒரு பரிசோதனை நோயாளியாக (Experimental Patient) பதிவு செய்யப்பட்டாள். இதன் பொருள், அவர்கள் கற்றுக்கொள்ள, கற்றுக்கொள்ள நீங்கள் சுகமாவீர்கள் அல்லது எப்படியென்று சொல்ல முடியாது. கொஞ்ச வருமானமே இருந்ததால், இதுதான் சிறந்த வாய்ப்பாகவும் அவர்களது ஒரே நம்பிக்கையாகவும் இருந்தது. சிகிச்சைக்காக அவர் மேற்கொண்ட மூன்றாவது முயற்சி இதுவாகும். புற்றுநோயானது மிகவும் ஆழமாக வேரூன்றி, அதன் தாக்குதல் கல்லீரல் மற்றும் அவளது உடலின் பிற உறுப்புகளைப் பாதித்து இருந்ததால் மருத்துவர்கள் இந்த நோயாளிக்கு எந்தவிதமான அறுவை சிகிச்சைகளையும் செய்யமுடியாது என்று ஏற்கனவே கூறியிருந்தனர். முன்பு அவர்கள் அவளுக்கு அறுவை சிகிச்சை செய்ய விரும்பியபோது அவள் வேண்டாம் என்று மறுத்து விட்டாள். அவள் அதை விரும்பவில்லை. எனவே, அடுத்த சந்திப்பு புதிய ஆண்டின் முதல் சில நாட்கள் கடந்த பிறகு ஜனவரி மாதத்தில் வரவிருந்தது. திருமதி. எக்கன்பர்க் இந்தச் சந்திப்பை எந்த ஒரு வெளிப்படையான காரணம் இல்லாமலேயே ரத்து செய்தாள். பின்பு அவள் தனது உடலில் உள்ள வலி மற்றும் புற்றுநோயின் விரைவான வளர்ச்சியையும் உணர்ந்தாள். ஆகவே வேறு வழியின்றி மூன்றாவது சந்திப்பை ஏற்படுத்தினாள். அந்தச் சந்திப்புக்காக, அவள் தன்னுடன் ஒரே ஒரு இரவுக்கான கைப்பையை எடுத்துக்கொண்டு சான்பிரான் சிஸ்கோ பேருந்து நிலையத்திற்குச் சென்றாள். அவளுடைய டிக்கெட்டும் அவளது பணப்பையில் கொஞ்சம் சில்லரையும் இருந்தது. அது பேருந்து நிலையத்திற்கும், அங்கிருந்து பல்கலைக்கழகத்திற்கும் நேர்வழியான ஒரு பயணமாக இருப்பதால், கொஞ்சம் பணமே தனக்குத் தேவைப்படுவதாகத் தன் கணவரிடம் கூறியிருந்தாள். அவளது கணவர், அவள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும்போது, தன் சொந்த வாகனத்தில் மருத்துவமனைக்கு வந்து அவளை அழைத்துச் செல்வதாக இருந்தது. அன்று அக்டோபர் 18, மறுநாள் மருத்துவர்கள் பரிசோதனையைத் தொடங்கும் நாள். அவளுடைய மனதிற்குள் அவர்கள் என்ன செய்வார்கள், தான் மரித்துப்போனால் குடும்பம் என்ன செய்யும் என்ற எண்ணம் வந்தது, அவளுடைய எண்ணங்கள் தொடர்ந்தது. அவள் தேவனைப் பற்றியும் நினைத்தாள். ஆனால் அவள் ஒரு ஆவிக்குரிய பெண்ணாகவோ, மறுபடியும் பிறந்தவளாகவோ இல்லாததால், இந்த எண்ணங்கள் மிகவும் ஆழமாக அவளுக்குள் ஊடுருவவில்லை. ஆனால் கிறிஸ்துவின் வழிகாட்டுதலுக்கு அவள் தனது சிறிய யூனிட்டி புத்தகத்தையும் (Unity Book) எடுத்துச் செல்ல முடிவு செய்தாள். அவளுடைய எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்கள் அவளை மிக நெருக்கமாக அழுத்தும்போது அவள் சில வேளைகளில் இதைப்படிப்பாள். அக்டோபர் 19ஆம் தேதி அதிகாலையில் சான்பிரான் சிஸ்கோவுக்குச் செல்லும் பேருந்து கலிபோர்னியாவின் ஓக்லாண்ட் (Oakland, California) என்ற பேருந்து நிறுத்தத்தில் 10 நிமிடம் நின்றது. அப்பொழுது பயணிகள் அனைவரும் இறங்கினர். ஆனால் திருமதி. எக்கன்பர்க், பயணக் களைப்பினால் தனது இருக்கையிலேயே அமர்ந்திருந்தாள். அவள் விரைவில் சான்பிரான்சிஸ்கோவில் இருப்போம், அங்கே இறங்குவோம் என்று அறிந்திருந்தாள். அவளுக்கு அறிமுகமான அந்த இடத்திலேயே இறங்குவாள். அங்கே உட்கார்ந்திருந்த போது திருமதி. எக்கன்பர்க் ஒரு சத்தம் அவளுடன் பேசுவதைக் கேட்க முடிந்தது. "தெருவுக்குச் சென்று நடந்து செல்,” என்று யாரோ ஒருவர் கூறுவதை மிகவும் வலுவான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அவள் உணர்ந்து உடனடியாக இறங்கினாள். எந்தக் குறிக்கோளும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தபோது "14வது தெருவில் நில்” என்று அந்தச் சத்தம் கூறியது. 14வது தெருவில் இருக்கும்போது அவளது பெலன் குறைந்து விட்டது. அங்கே நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கும்போது, ஒரு காபி கடையை கவனித்தாள். அவள் ஃபோஸ்டர்ஸ் கஃபேவுக்குள் (Foster's Cafe) நுழைந்து ஒரு கப் காபி குடித்தாள், சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் தெருவில் நடக்கத் தொடங்கினாள். சிறிது தூரம் நடந்த அவள், விரைவில் மீண்டும் சோர்வடைந்து ஓய்வெடுக்க ஒரு கட்டடத்தின் சுவரோரமாகச் சாய்ந்தாள். அப்போது தான் உள்ளூர் பேருந்து வருவதற்காகக் காத்திருக்கும் இடத்தில், பேருந்து நிழற்குடை இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி மீது அவள் கண்கள் சென்றன. அவள் சற்று நேரம் அங்கேயே நின்றுவிட்டு, பின்னர் அந்தப் பெண்ணின் இருக்கைக்கு அருகில் சென்று உட்கார முடிவு செய்தாள். அவள் உட்கார்ந்தபோது, அந்தப் பெண் ஒரு புத்தகத்தைப் படிப்பதைக் கவனித்தாள். அவளும் தன்னுடைய சிறிய புத்தகத்தை ஆறுதலுக்காகப் படிக்கலாம் என்று நினைத்தாள். இரண்டு பெண்கள் ஒரு பேருந்து நிழற்குடை இருக்கையில் உட்கார்ந்து புத்தகங்களைப் படிக்கும் காட்சி பார்வைக்கு அற்பமானதாக இருக்கலாம். அவர்கள் முற்றிலும் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள். ஆனால், அது தொடர்ந்து அப்படி இருக்கவில்லை. தேவன் திருமதி. எக்கன்பர்க்கை நற்செய்தியை உடைய ஒரு இரக்கத்தின் தூதனிடத்திற்கு வழிநடத்தியிருந்தார். பேருந்து நிலையத்திலிருந்து அவளை வழிநடத்தி, நற்செய்தியாகிய சுவிசேஷத்தை அவளுக்குக் கொண்டு வரவும் அவளை கவனிக்கவும் அவர் தெரிந்து கொண்ட அந்தப்பெண்ணின் அருகில் அமரச்செய்தார். சிறிது நேரத்தில் அவர்கள் உரையாடலைத் தொடங்கினர். அவர்கள் ஒரு சில கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். விரைவில் திருமதி எக்கன்பர்க் தனது நோயின் கொடூரத்தையும் அவள் செல்லும் இடத்தையும் பற்றி முற்றிலும் அறிமுகமில்லாத அந்தப் பெண்ணிடம் பகிர்ந்து கொண்டாள். அந்தப் பெண், நான் படிக்கும் "தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன்” என்ற இந்த புத்தகத்தைப் பாருங்கள். இந்த மனிதன் இங்கே ஓக்லாண்டில் இருக்கிறார். இன்றிரவு தனது கூட்டங்களைத் தொடங்குகிறார். அவர் உங்களுக்காக ஜெபிப்பார். பலர் புற்றுநோயிலிருந்து குணமடைந்துள்ளனர் என்று கூறினாள். திருமதி. எக்கன்பர்க் ஒரு கணம் என்ன நினைக்க வேண்டும் என்று தெரியாமல், அந்தப் பெண்ணை விசித்திரமாகப் பார்த்தாள். தேவன் இன்று சுகமாக்குவதைப் பற்றியோ அல்லது இது போன்ற விஷயங்கள் நடப்பதைப் பற்றியோ அவள் நினைத்துக்கூட பார்த்ததில்லை. அவளுடைய புதிய தோழி, துன்பப்படுகிற மனித இனத்தின் மேலுள்ள தேவனுடைய இரக்கத்தையும் சுகமாக்குதலையும் பற்றிய பல விறுவிறுப்பான சம்பவங்களைக் கூறி அவளது நினைவுகளில் குறுக்கிட்டாள். திருமதி. எக்கன்பார்க் அத்தகைய எழுச்சியூட்டும் வார்த்தைகளை ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. அவை அவளுடைய இருதயத்திற்கு ஒரு அமைதியைக் கொடுத்தன. அவளுக்கு ஆறுதலும் ஊக்கமும் கிடைத்தது. யாரும் இதைப்போல பேசுவதையும், இது போன்ற பெரிய மற்றும் அற்புதமான விஷயங்களையும் பேசுவதை அவள் இதற்கு முன்பு ஒரு போதும் கேள்விப்பட்டதே இல்லை. என் அறைக்கு வந்து ஓய்வெடுங்கள், இன்று மாலை நான் உங்களைக் கூட்டத்திற்கு அழைத்துச் செல்வேன். தெருவுக்கு எதிரில் எனக்கு ஒரு தங்கும் அறை இருக்கிறது,” என்ற அந்தப் பெண்ணின் நேரடி அழைப்பால் மீண்டும் அவளது எண்ணங்கள் சிதைந்தன. திருமதி. எக்கன்பர்க் மற்றும் அந்தப் பெண்மணியும் வீதியைக் கடந்து ஹோட்டலுக்குள் நுழைந்தனர். அந்தப் பெண் தன்னுடைய அறைக்கு எதிரில் எக்கன்பர்க்குக்காக ஒரு அறையை ஏற்பாடு செய்தாள். பின்பு திருமதி. எக்கன்பர்க் சிறிது நேரம் ஓய்வெடுப்பதாக முடிவு செய்து படுத்துக் கொள்ளத் தனது அறைக்குச் சென்றாள். அந்தப் பெண் தன்னிடம் சொன்னதைப் பற்றி அவள் சிந்திக்கத் தொடங்கினாள். அவளுடைய வாழ்க்கையில் முதல் முறையாக ஜெப ஆவிக்குள் நுழைந்தாள், அவள் தொடர்ந்து ஜெபித்தாள். அவள் ஒருபோதும் அறிந்திராத ஒரு அமைதி அவள் இதயத்தை நிரப்பியது. ஜெபத்திலும் கண்ணீரிலும், அவளுடைய புதிய தோழியுடன் ஐக்கியப்படுவதிலும் அந்தப் பிற்பகலைக் கழித்தாள். கூட்டத்தைத் தொடங்குவதற்கான நேரம் வந்தபோது, அவளது தோழி ஓக்லாண்ட் நகரத்திலுள்ள சிவிக் ஆடிட்டோரியம் (Civic Auditorium) என்ற கூட்டம் நடக்கு மிடத்திற்கு அழைத்துச் சென்றாள். அங்கு வந்தபின், அவளுடைய தோழி அவளுக்கு ஒரு இருக்கை கண்டுபிடிக்க உதவியதுடன், அக்கறையுடன் அவளைக் கவனித்தாள். சிறிது நேரத்தில் பில்லிபால் பிரன்ஹாம் (Billy Paul Branham) அவளிடம் ஒரு ஜெப அட்டை வேண்டுமா? என்று கேட்டார். அவள் “ஆம்” என்று கூறி அவருக்கு நன்றி சொன்னாள். விரைவில் ஆராதனை தொடங்கியது. திருமதி எக்கன்பார்க் இது போன்ற ஒரு பிரசங்கத்தை அவளது வாழ்க்கையில் கேள்விப்பட்டதே இல்லை. அது அவளை அழவைத்ததுமல்லாமல் பிரமிப்பினால் நிறைத்தது. அவள் இன்று நடத்தப்பட்டதைப் போல ஒரு போதும் கனிவாக நடத்தப்படவில்லை. இந்த அற்புதமான விஷயங்களைப்பற்றி அவள் கேள்விப்பட்டதே இல்லை. இப்போது அவளுடைய ஜெபவரிசை அட்டை அழைக்கப்பட்டது. அவள் இந்த தேவ மனுஷனுக்கு முன்பாக நிற்க வேண்டும். தனக்கு முன்னால் இருந்த மற்ற 14 நபர்களுக்கு ஜெபம் ஏறெடுக்கப்பட்டதையும், மற்றவர்களைப் பார்வையாளர்களுக்கு உள்ளிருந்து அழைத்ததையும் அவள் கண்டு இந்த மனிதர் தன்னிடமும் மருத்துவர்களிடமும் இல்லாத பதில்களைச் சொல்வார் என்று அவளுக்குத் தெரிந்தது. சில நிமிடங்களில் ரோஸ் எக்கன்பர்க், கனம் பொருந்திய பிரன்ஹாம் முன் நின்றாள். அவர், மரணத்தின் நிழல் அவள் மீது நிழலாடியதாகவும் கல்லீரலில் புற்றுநோய் இருப்பதாகவும் அவளிடம் சொன்னார். மேலும்,"உனக்காக ஜெபித்தால் தேவன் உன்னைச் சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறாயா?” என்று அவளிடம் கேட்டார். அவள், ஆம் என்று கூறிக் கண்ணீர் வடித்தாள். அடுத்தநாள், அக்டோபர் 20,1956 காலை 7 மணிக்கு, ரோஸ் எக்கன்பர்க் உடலிலிருந்து பெரிய பாதிக்கப்பட்ட சதைத்துண்டுகள் மற்றும் மோசமாக பாதிக்கப்பட்ட இரத்தம் ஆகியவை வெளியேறின. அடுத்த வாரம் அக்டோபர் 24, 1956 அன்று காலை 11 மணிக்கு ஒரு சாதாரண இரத்தக்கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒரு பெரிய கடினமான கட்டியுடன் அதிக பாதிப்படைந்த சதையும் அவளது சரீரத்தில் இருந்து வெளியேறி, அவளது பாதிக்கப்பட்ட துர்நாற்ற இரத்தத்தை நீக்கியது. நண்பர்களே, ரோஸ் எக்கன்பர்க் இன்றும் வாழ்கிறார். அவள் தேவனிடம் உண்மையாக மனந்திரும்பியவள். இது உண்மையிலேயே தேவனுடைய ஆசீர்வாதம். ஆனால் ரோஸ் எக்கன்பர்க்கிற்கு இது எங்கிருந்து தொடங்கியது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு தூதனாகவும், சுவிசேஷ நற்செய்தியின் சாட்சியாகவும் இருந்த ஒரு பெண்ணை அவள் சந்தித்த ஒரு பேருந்து நிறுத்த இருக்கையில்தான். ஐந்து மில்லியன் ஜனங்கள் வசிக்கும் ஒரு நகரத்தில், தேவன் அவளை ஒரு சரியான அந்நிய நபரிடம் அழைத்துச் சென்றார். அன்பானவர்களே! அடுத்த முறை நீங்கள் பேருந்து இருக்கையில், அல்லது உங்கள் காரில் அல்லது தெருவில் அல்லது ஒரு ஓட்டலில் தனியாக இருக்கும்போது; நீங்கள் எங்கிருந்தாலும் நம்பிக்கையற்ற, தடுமாற்றத்துடன் மரித்துக் கொண்டிருக்கும் மனிதகுலத்திற்கு உங்கள் இதயத்திலும் உதடுகளிலுமிருந்து பிறக்கும் ஜீவனை அளிக்கும் வார்த்தைகளை நீங்கள் அளிக்க முடியும். இனிமேல் சாட்சியைப் பகிர்ந்து கொள்ள நினைவில் கொள்ளுங்கள். கிருபையின் தூதன் நீங்களாகக் கூட இருக்கலாம். 6. வல்லமையுள்ள ஜெயவீரர் (சகோ. பிரன்ஹாமின் செய்தி) இன்றிரவு கர்த்தராகிய இயேசுவின் வெளிப்படுத்துதல் புத்தகத்திலிருந்து ஆறாவது அத்தியாயத்தில் முதல் இரண்டு வசனங்களை நான் படிக்க விரும்புகிறேன். 1. ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக் கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம் போன்ற சத்தமாய்ச் சொல்லக் கேட்டேன். 2.நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக் குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்ப வனாகவும் புறப்பட்டான். இன்றிரவு எனது பிரசங்கத்தின் தலைப்பு "வல்லமையுள்ள ஜெயவீரர்" (The Mighty Conqueror) என்பதாக இருக்கும். உபத்திரவத்திற்கு (Tribulation) முன்பாக எடுத்துக் கொள்ளப்படுதல் (Rapture) நடக்கும் என்று நான் முழு மனதுடன் விசுவாசிக்கிறேன். இப்போது பல போதகர்கள் இதை ஏற்கமாட்டார்கள், ஆனால் நான் அதிக கல்வி பயிலாதவன். நான் வேதத்திலுள்ள மாதிரிகளையும் (Types) அவைகள் எவ்வாறு நிழலாட்டமாயிருக்கிறது என்பதையும் அடிக்கடி படிக்கிறேன். எந்த ஒரு பொருளுக்கும் அதன் நிழலைப் புரிந்து கொண்டால் நிஜத்தில் எப்படி இருக்கும் என்பதற்கான பொதுவான கருத்து நமக்குக் கிடைக்கும். நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயம் ஏற்பட்டபோது, நோவாவும் ஜலப்பிரளயத்திலிருந்து காப்பாற்றப்பட வேண்டிய அனைத்தும் பேழைக்குள்ளே வந்து, கதவு அடைக்கப்படும் முன் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வானத்திலிருந்து விழவில்லை. வானத்திலிருந்து சோதோம் மற்றும் கொமோரா மீது ஒரு நெருப்புதனல் விழுமுன், லோத்து நகரத்தை விட்டு வெளியேறி, அந்த நகரங்களுக்கு வரவிருக்கும் நியாயத்தீர்ப்பிலிருந்து விடுபட வேண்டியதாயிருந்தது என்பதைக் காண்கிறோம். ஏனென்றால் நீதியுள்ள நியாயாதிபதி நீதிமானையும் துன்மார்க்கனையும் ஒன்றாக நியாயந்தீர்க்க மாட்டார். ஏனெனில் கிறிஸ்து விசுவாசிக்குப் பதிலாக நியாயந்தீர்க்கப்பட்டபோது அந்த விசுவாசி ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டிருக்கிறான். ஆகையால் பரிசுத்த தேவன், கிறிஸ்துவில் நம்முடைய நியாயத்தீர்ப்பை ஏற்கனவே ஏற்றுக் கொண்டபின் நம்மில் ஒருவரையாகிலும் மீண்டும் நியாயந்தீர்ப்பார் என்பது அநீதியாகும். இப்போது வல்லமையுள்ள ஜெயவீரர் என்ற நமது தலைப்பிற்கு வருவோம். மனிதன் ஜெயிக்க விரும்புகிறான், ஜெயிப்பது ஒரு பெரிய காரியம். ஒருவன் தன் சத்துருவை மேற்கொள்ளும்போது அவன் ஜெயங்கொள்ளுகிறவனாய் இருக்கிறான். அதனால்தான் நாம் முற்றும் ஜெயங்கொள்ளு கிறவர்களாய் இருக்கிறோம் என்று வேதம் கூறுகிறது. ஏனென்றால், அவர் நமக்காக ஜெயித்தார். இந்த மாபெரும் காலங்களில் மனிதர்கள் முன்னேறி, ஜெயிக்கும் போது, பெரும்பாலும் ஒரு பெரிய கொண்டாட்டத்தைக் கொண்டாடுகின்றனர். மறைந்த ஜெர்மன் தலைவரான அடோல்ஃப் ஹிட்லர் (Adolf Hitler) பிரான்சைக் (France) கைப்பற்றியபோது, அவர் வெற்றிவிழா வளைவில் அமர்ந்துகொண்டு அவரது பெரிய இராணுவம் செல்வதைப் பார்த்தார். அவரது டாங்கிகள் (Tanks) உருண்டன, மற்றும் அவரது விமானங்கள் வானத்தை இருட்டடிக்கும் வரை முழங்கிக் கொண்டு தலைக்குமேல் பறந்தன. ஆனால் அது நீடிக்கவில்லை. ஏனென்றால் ஒரு மனிதன் ஜெயிப்பவனாக இருந்தால் அவனது குறிக்கோள் (Objective) சரியாக இருக்கவேண்டும். அவனது நோக்கங்கள் (Motive) சரியாக இருக்க வேண்டும். மேலும் நீங்கள் விளையாட்டை நியாயமாக விளையாடாவிட்டால் நீங்கள் எவ்வளவு பெரிய ஜெயவீரராக இருந்தாலும் தோல்வியடைவீர்கள். நீங்கள் ஜெயங்கொள்ள வேண்டுமென்றால் உண்மையுள்ளவராக இருக்கவேண்டும். எந்த ஏமாற்றுக்காரனும் ஒரு விளையாட்டில் வெல்ல முடியாது. ஆனால் ஹிட்லர் ஒருபோதும் விதிகளைப் பின்பற்றவில்லை, எல்லா அதிகாரமும் எல்லா மகிமையும் தனக்கே வேண்டும் என்று விரும்பினார். எனவே, அவர் தனது குறிக்கோளில் தவறாக இருந்தார். ஹிட்லரின் அதே நோக்கங்களும் வழிகளும் கொண்ட எந்த மனிதனும் அவர் அடைந்த முடிவையே அடைவான். மாபெரும் கான்ஸ்டன்டைன் (Constantine) ரோமாபுரிக்குச் செல்லும்போது, போர் நடப்பதற்குச் சற்று முன்பு ஒரு கனவு கண்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அன்று மாலை தூங்குவதற்கு முன்பு அவர் காலையில் சண்டையிடப்போகும் போரின் முடிவைக்குறித்துக் கவலைப்பட்டார். அன்றிரவு அவர் ஒரு வெள்ளைச் சிலுவையைக் கனவில் கண்டார், ஒரு சத்தம் ”இதன் மூலம் நீ ஜெயம் கொள்வாய்" (By this you will conquer) என்றது. ஆகவே, அவர் இரவில் தனது சக வீரர்களை எழுப்பி, அவர்கள் தங்கள் கேடயங்களில் ஒரு வெள்ளைச் சிலுவையை வரையும்படிச் செய்து அவர் ஜெயங்கொண்டார். நான் இப்போது வேறொரு மனிதனைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு நான் பெல்ஜியத்தில் (Belgium) நெப்போலியன் (Nepolean) என்ற ஒரு நபர் இரத்தத்தினாலும் அவமானத்தினாலும் நிறைந்தவராய் தோல்வியைச் சந்தித்த வாட்டர்லூ (Waterloo) என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தேன். நான் அங்கே நின்றபோது யாரோ ஒருவர் ஒரு சிறிய புத்தகத்தை என்னிடம் கொடுத்தார்கள். அந்த மாபெரும் மனிதனின் வரலாற்றை நான் படிக்க ஆரம்பித்தேன். அவர் ஒரு சிறந்த போர் வீரராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி தனது 33வது வயதிலேயே உலகம் முழுவதையும் வென்றார். ஆனால் அவருக்கும் தவறான நோக்கங்கள் இருந்தன. அவர் தனக்கு மட்டுமே அதிகாரம் இருக்க வேண்டுமென்றும் எல்லோரும் அவரைக்கண்டு பயப்பட வேண்டுமென்றும் விரும்பினார். நெப்போலியன் 33 வயதிலேயே உலகம் முழுவதும் அவரைப்பற்றி சிந்தித்தாலே நடுங்கும் அளவிற்கு ஒரு கெட்ட மனிதராகவும் கொலைகாரராகவும் இருந்தார். அவர் தொடக்கத்தில் மதுவிலக்கை ஏற்படுத்தினாலும் ஒரு குடிகாரனாக மரித்தார். நீங்கள் தவறான வழியில் ஜெயிக்க முடியாது. சரியானவர்கள் மாத்திரமே ஜெயிப்பார்கள். நீங்கள் ஒரு ஸ்தாபனத்தின் மேல் (Denomination) மற்றொரு ஸ்தாபனத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் ஒருபோதும் ஜெயிக்க முடியாது. நீங்கள் பிரிவினைகளைத் தள்ளி பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் முழு சரீரத்திலும் வரும்படி இடம் கொடுத்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். சுயநல நோக்கங்களுடன் காணப்பட்டால் நாம் ஒருபோதும் ஜெயிக்க முடியாது. தேவன் பாவத்தை வெறுக்கிறார். அது ஜெயிக்க அவர் அனுமதிக்கமாட்டார். உலகத்தை வென்றவராக நெப்போலியன் முப்பத்தி மூன்று வயதில் மரித்தார். ஆனால் பாவம் அவரை மேற்கொண்டது. ஆனால், ஓ! முப்பத்தி மூன்று வயதில் மரித்த மற்றொரு மனிதர் இருந்தார். அவர் உலகை வென்றார். நரகத்தை வென்றார்; மரணத்தை வென்றார்; மனித இனத்திற்கு எதிரான ஒவ்வொரு எதிரியையும் வென்றார். அவர்தான் எங்கள் துதிக்கப்படத்தக்க கர்த்தராகிய இயேசு (Lord Jesus). அவர் வல்லமையுள்ள ஜெயவீரர். அவர் தனக்காக ஜெயிக்க வரவில்லை; அவரை அனுப்பிய தேவனுடைய சித்தத்தைச் செய்வதே அவருடைய நோக்கமாகயிருந்தது. அவர் தனக்காகப் போராடவில்லை. அவர் தன்னை ஒப்புக்கொடுத்தார். சிலுவையில் அவர், "நான் பிதாவினிடத்தில் கேட்டுக் கொண்டால், உடனே அவர் எனக்கு ஆயிரமாயிரமான தேவதூதர்களை அனுப்புவார்” என்று கூறினார். ஆனால் அவர் ஆதாமின் விழுந்துபோன இனத்திற்காக ஜெயிக்க வந்தார், ஆதாமின் விழுந்துபோன இனத்தின் ஒவ்வொரு எதிரியையும் அவர் ஜெயித்தார். அவர்கள் அவருடைய காலடியில் போடப்பட்டனர். வல்லமையுள்ள ஜெயவீரராகிய நம்முடைய ஆண்டவர், இந்தப் பூமியில் இருந்தபோது, சங்கிலியால் கட்டப்பட்டு, அசுத்த ஆவியின் வல்லமையால் கட்டுண்ட ஒரு மனிதனின் அருகே நின்றதை நான் காண்கிறேன். எந்தவொரு சேனையின் வல்லமையும் அவனைப் பிடிக்க முடியவில்லை. பெரும்பாலும் அவன் சங்கிலிகளை உடைத்தெறிந்தான். யாராலும் அவனை வெல்ல முடியவில்லை. தீய சக்திகள் அவனை மனித குலத்திலிருந்து விரட்டியடித்தன; அவன் கல்லறைகளில் தனது வீட்டை அமைத்திருந்தான். யார் தன் வழியே கடந்து சென்றாலும் அவர்களை ஜெயிப்பான்; ஆனால் ஒரு நாள் சாலையில் ஒரு சிறிய மனிதர் வந்தார். "நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது” என்று வேதம் கூறுகிறது. அவனுக்குள் இருந்த அசுத்த ஆவி,"அந்த சிறிய மனிதனை நான் ஜெயிப்பதற்கு இதுதான் நேரம்” என்று நினைத்தது. அவைகள் அந்த மனிதனை ஆட்கொண்டிருந்தன. அவைகள் அவரைச் சந்திக்கச் சென்றன. அவைகள் அவரை மேற்கொள்ள அவரிடம் நெருங்குகையில், அவர் கண்களை உயர்த்தினார். அவைகள் தங்கள் தொனியை மாற்றின. அவரை மேற்கொள்ள முயற்சிப்பதற்குப் பதிலாக, ”தேவனுடைய பரிசுத்தரே, காலம் வருவதற்கு முன்பு எங்களை ஏன் வேதனைப்படுத்த வந்தீர்” என்று கூறின. தங்களை மேற்கொள்ளும் ஒருவரைச் சந்திக்கிறோம் என்று அவைகள் அறிந்திருந்தன. பரலோகத்தின் பெரிய வல்லமையுள்ள ஜெயவீரர் தற்போது நின்று கொண்டிருந்தார். பிசாசு பிடித்த ஒரு மனிதனைப் பிடித்துச் சங்கிலிகளை உடைக்க அவர் உடல் ரீதியாக பெரியவராக இல்லை. ஆனால் பிசாசுகள் தலைவணங்க வேண்டிய சர்வவல்லமையுள்ள தேவனுடைய வல்லமை அவருக்குள் இருந்தது. அத்தகைய ஆவியால் கட்டப்பட்ட ஆதாமின் இனம், இந்த மாபெரும் வல்லமையுள்ள ஜெயவீரரின் நாமத்தைப் பயன்படுத்தி அவனைத் துரத்தும் பாக்கியத்தை அடையும்படி அவர் அந்தச் சத்துருவை வென்றார். நம்முடைய வல்லமையுள்ள ஜெயவீரர், பேதுருவின் (Peter) மாமியாருடைய அறைக்குள் வந்து, அவள் ஜுரத்துடன் இருப்பதைக் கண்டு, அவர் ஒரு வார்த்தை கூட பேசாமல், அவளருகில் நடந்து சென்று, அவள் கையைத் தொட்டார், வியாதி மேற்கொள்ளப்பட்டது. ஆதாமின் இனத்திற்காக அவர் நோயை ஜெயித்தார். ஒரு நாள் அவரது நெருங்கிய நண்பன் மரித்துவிட்டான்; அப்போது அவர் நான்கு நாள் பயண தூரத்திலிருந்தார். அங்கு அவர் வந்த நேரத்தில் அவனது உடலில், தோல்மீது புழுக்கள் ஊர்ந்து கொண்டிருந்தன. மேலும் அவர் குலுக்கிய கைகளும், அவர் தழுவிய தோள்களும் இப்பொழுது கெட்டு, மரணத்தால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவர் லாசருவின் (Lazarus) பக்கத்தில் நிற்பதை என்னால் காண முடிகிறது. "லாசருவே வெளியே வா”, என்று கண்ணீரால் நிறைந்த கண்களுடன் அவர் சொல்லும்போது அழிவு தன்னால் பாதிக்கப்பட்டவனைத் திருப்பி அளித்தது; மரணம் அந்த மனிதனின் ஆத்துமாவை விடுவித்தது. ஏனென்றால் வல்லமையுள்ள ஜெயவீரர் பேசினார். ஆதாமின் அனைத்துப் பிள்ளைகளுக்கும் அவர் இதைச் செய்ய முடியும். அவர் என் நண்பராக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒருவேளை, இயேசு கொஞ்ச நேரம் தாமதித்தால், நாமும் அப்படித்தான் கிடந்திருப்போம். ஒருநாள் இரவு அவர் கடலைக் கடக்கும்போது பூமியின் வலிமையான காரணிகள் (Mighty Elements) கீழ்ப்படிய வில்லை. காற்று வன்மையாகிக் கடலைப் பெரிதும் வருத்தப்படுத்திய போது, அவர் ஒரு சிறிய படகின் பின்பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததார். விரைவில் சிறிய படகு அதிகத் தண்ணீரினால் நிரம்பியது. சீடர்கள் பெரிதும் அஞ்சினர் அவர்கள் அவரை எழுப்ப விரைந்தார்கள். அவர் விழித்தபோது ஓ, அற்பவிசுவாசிகளே உங்கள் விசுவாசம் எங்கே?” என்றார். வேறு வார்த்தைகளில் சொன்னால், "இந்தக் காரியங்களை நான் ஒவ்வொரு நாளும் செய்வதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள், ஒரு பிசாசு பிடித்தவன் விடுவிக்கப்பட்டதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களே, காய்ச்சல் பேதுருவின் மாமியாரை விட்டு வெளியேறியதை நீங்கள் அனைவரும் பார்த்திருக்கிறீர்களே, மரித்தவர்கள் எழுப்பப்பட்டதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களே! உங்கள் விசுவாசம் எங்கே? என்றார். பின்னர் அவர் படகின் விளிம்பின் மீது கால் வைத்து மேலே பார்த்து, "இரையாதே, அமைதியாய் இரு" என்றார் அப்பொழுது அனைத்து அலைகளும் தன் தாயின் கைகளில் அடங்கும் ஒரு குழந்தையைப் போல அமர்ந்தன. காற்றும் கடலலைகளும் அவருக்குக் கீழ்படிந்தன. அவர்கள் செல்லும் கடலின் மறுபுறம், ஒரு பெண் வாழ்ந்து வந்தாள். அவள் தனது ஆஸ்தியை எல்லாம் மருத்துவத் திற்காகச் செலவிட்டபின்பும், இரத்தப்போக்கினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். மருத்துவர்கள் அவளிடம் வாங்கிய பணத்திற்காக அவளுக்கு உதவ கடுமையாகவும் உண்மையாகவும் முயன்றார்கள். அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தாலும் அவளுடைய இரத்தப்போக்கு நிற்கவில்லை. இயேசு அந்த வழியாக வருவதை அவள் கேள்விப்பட்டாள், அதனால் அவள் கடற்கரைக்குப் போகப் புறப்பட்டாள். அவள் கூட்டத்திற்குள் போராடிச் சென்றதால் பெலனற்றுப் போனாள். ஆனால் அவளுடைய விசுவாசம் *அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டால் கூட சுகமடைந்துவிடுவேன்” என்பதாக இருந்தது. அவள் அதைச் செய்தாள். வல்லமையுள்ள ஜெயவீரரைத் தொட்டவுடன், மருத்துவர்களின் மருந்தை அசட்டை செய்த நோய் வல்லமையுள்ள ஜெயவீரரின் சித்தத்திற்குக் கீழ்ப்படிந்தது. அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்று போயிற்று. யவீருவின் (Jairus) வீட்டை மரணம் தாக்கியது நினைவிருக்கிறதா? பன்னிரெண்டு வயதான அவனுடைய மகள் மரண அவஸ்தையில் இருந்தாள். அவர்கள் வந்து இயேசுவை வரும்படி வேண்டிக்கொண்டார்கள், ஆனால் அவர் யவீருவின் வீட்டிற்கு அருகில் வரும்போது, அவன் வீட்டிலிருந்து வந்த தூதுவர்கள் (Messengers) அவர்களை மீண்டும் சந்தித்து, *மகளுக்காகப் போதகரைத் தொந்தரவு செய்யாதீர்கள், அவள் ஏற்கனவே மரித்துவிட்டாள்” என்று கூறினர். சில நேரங்களில் "எல்லாம் முடிந்துவிட்டது, வேறு நம்பிக்கை இல்லை” என்று நாம் நினைக்கிறோம். ஆனால், அவர் இன்னும் வல்லமை யுள்ள ஜெயவீரராக இருக்கிறார். எல்லா நம்பிக்கையும் அற்றுப் போகும்போது அவர் இன்றும் மாறாதவராக இருக்கிறார். நிச்சயமாக, எல்லாம் முடிந்துவிட்டது என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் நம் ஆண்டவரின் விலையேறப்பெற்ற கண்கள் யவீருவை நோக்கிப் பார்த்தன. "பயப்படாதே, விசுவாசமாயிரு, நீ தேவனுடைய மகிமையைக் காண்பாய்' என்று அவர் சொன்னார். யவீருவின் சிறிய மகளின் முடிவை காலத்தின் இறுதி மட்டுமே வெளிப்படுத்தக்கூடிய மரண அறைக்கு இயேசு சென்றார். ஆனால் துவக்கமும் முடிவும் அவளுக்கு அருகில் நின்று கொண்டிருந்ததை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? அவர் அவளைத் தன் கையினால் தூக்கிவிட்டு, "சிறுபெண்ணே, எழுந்திரு” என்று சொன்னார். மரணம் மேற்கொள்ளப்பட்டது அவள் உயிரோடு எழுந்து நின்றாள். மனிதன் இதுவரை கண்டிராத மிகப்பெரிய எதிரி மரணம். ஆனால் ஒரு நாள் அவர் கல்வாரிக்குச் (Calvary) சென்றார். அங்கே அவர் முழு மனுக்குலத்திற்காகவும் ஒரே தரம் சிலுவையில் வெற்றி சிறந்தார். எல்லா மனிதர்களுக்கும் கிடைத்த ஜெயம் அது; மனிதன் இதுவரைக் கண்டிராத மிகப்பெரிய எதிரியாகிய மரணத்தை, நம் அனைவருக்காகவும் அவர் ஜெயித்தார். அது அவர் மரித்தபோது முடிவடையவில்லை, அவர் இன்னும் வல்லமையுள்ள ஜெயவீரராக இருக்க வேண்டியிருந்தது. ஆகவே, வேதம் சொல்லுகிறபடி அவர் சென்று காவலில் இருந்த ஆத்துமாக்களுக்குப் பிரசங்கித்தார். அவர்கள் ஏனோக்கு (Enoch), நோவா (Noah) மற்றும் தீர்க்கதரிசிகளை நிராகரித்தவர்களும், சோதோமில் இருந்தவர்களும் ஆவர். வல்லமையுள்ள ஜெயவீரர் தாம்தான் என்றும், எல்லா தீர்க்கதரிசிகளின் செய்திக்குத் தாமே பதில் என்றும் அவர்களுக்குச் சாட்சியாக அறிவித்தார். ஆனால் அவர்கள் மரணத்திற்கும் ஜீவனுக்கும் இடையில் இரண்டையும் பிரிக்கும் கோட்டைக் கடந்து சென்றுவிட்டனர். அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. ஆனால், அவர் பிசாசின் பகுதிகளுக்குச் சென்றார். அசுத்த ஆவிகளை அவர் சிதறடித்தார். இருண்ட பாதாளத்தின் ஆழத்திற்குச் சென்றார். அவருடைய சரீரமோ சிலுவையில் அமைதியாக இருந்தது. அவர் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். அவர் இப்பொழுதும் மகா பெரியவரும் வல்லமையுள்ள ஜெயவீரராகவும் இருக்கிறார். 1900 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் அவர் இன்னும் வல்லமையுள்ள ஜெயவீரராக இருக்கிறார். அவர் பாதாளத்தின் கதவுகளை அடைந்தபோது, (நாம் இங்கே ஒரு சிறிய நாடகத்தைப் பயன்படுத்துவோம்) பிசாசு வெளியே வந்து, "ஆகவே நான் இறுதியாக உம்மைப் பிடித்துவிட்டேன், இறுதியாக நீர் வந்திருக்கிறீர், இவ்வளவு நாளும் அந்தச் சந்ததியை (கிறிஸ்து) நான் அழிக்க முயற்சித்தேன், நான் ஆபேலை அழித்தபோது உம்மை அடைந்துவிட்டேன் என்று நினைத்தேன், நான் தீர்க்கதரிசிகளை அழித்த போது நான் உம்மைப் பெற்றுக் கொண்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன்; யோவானின் தலை துண்டிக்கப்பட்ட போது நான் உம்மை அடைந்துவிட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன்; ஆனால் இப்போது நீர் எங்கே இருக்கிறீர்; நீர் என் ராஜ்யத்தில் இருக்கிறீர்; நீர் என் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறீர்; என் அதிகாரத்தின் கீழ் இருக்கிறீர்; ஏனென்றால் நீர் ஒரு பாவியாக மரித்திருக்கிறீர்” என்று இயேசுவைப் பார்த்து முழங்கினான். நான் இயேசு சொல்வதைக் கேட்க முடிகிறது. "ஓ, சாத்தானே நான் கன்னியினிடத்தில் பிறந்த தேவனுடைய குமாரன், என் இரத்தம் சிலுவையில் இன்னும் ஈரமாக இருக்கிறது. ஆதாமின் வீழ்ச்சியடைந்த இனத்திற்கான ஒவ்வொரு நியாயமான தேவையையும் நான் சந்தித்து, நான் இங்கு ஜெயவீரராகவும், மேற்கொள்ளவும் வந்திருக்கிறேன,” அவர் பிசாசை நெருங்கி, மரணத்திற்கும் பாதாளத்திற்கும் உரிய திறவுகோல்களைப் பிடுங்கிக் கொண்டு, பிசாசை உதைத்து, அவன் சேர வேண்டிய குழியில் அவனைத் தள்ளினார். அவர் இன்றும் வல்லமையுள்ள ஜெயவீரராக இருக்கிறார். அவர் கல்லறையின் மீது வெற்றியைப் பெறும்படி மரணத்தையும் பாதாளத்தையும் ஜெயித்து மீண்டும் பூமிக்குத் திரும்பினார். ஆனால் அவர் மகத்தான பாதைகளில் செல்லும்போது சிலர் பாடல்கள் பாடுவதை அவர் கேட்டார். மேலும் அவர், நோவாவின் செய்திக்குச் செவிகொடுத்தவர் களும் தீர்க்கதரிசிகளின் செய்திக்குச் செவிகொடுத்தவர்களும் காத்திருக்கிற, பரதீசின் (Paradise) வாசல்களுக்கு அருகில் தான் வந்திருப்பதை அறிந்து கொண்டார். பூமிக்குமேல் பாவத்தின் பனிமூட்டம் (Mist of sin) தொங்கிக் கொண்டிருந்ததால் அவர்களால் மேலே செல்ல முடியவில்லை. ஏனென்றால் காளைகள், ஆடுகள் மற்றும் ஆட்டுக்குட்டிகளின் இரத்தம் மனிதனுடைய பாவத்திற்குப் பரிகாரம் செய்ய முடியவில்லை. எனவே, அவர்கள் பரதீசு என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்தனர். பூமியின் மீது பாவத்தின் பனிமூட்டம் இருந்தது. அவர்களால் மேலே ஏறிச்செல்ல முடியவில்லை. ஆனால் கீழே இறங்கி வந்தவரால் செல்ல முடியும். அவர் பரதீசின் வாசல் வரை நடந்து சென்று கதவை லேசாகத் தட்டுகிறார். பிதாவாகிய ஆபிரகாம் (Abraham) கதவைத் திறக்கிறார். அவர் சில நொடிகள் கட்டுண்ட வரைப்போல நிற்கிறார்; பின்னர் அவர், "சாராள் (Sarah) ஒரு கணம் இங்கே வா! நீ அப்பங்களைச் சுட்டது இவருக்காக அல்லவா? அன்று கர்வாலி மரத்தின் கீழே உட்கார்ந்தவர் இவரல்லவா? என சாராளிடத்தில் கேட்டார். சாராள் கூறுகிறாள்: "அவர் தான், கூடாரத்துக்கு முன் திரும்பி நின்று என் வயதான காலத்தில் நான் குழந்தையுடன் இருப்பேன் என்று அவர் சொன்னபோது நான் என் உள்ளத்திலே நகைத்தபோது என் எண்ணங்களை அறிந்திருந்தவர்". இயேசு பேசினார். "பிள்ளைகளே, நான் இப்போது உங்களை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன். பாவம் என்று அழைக்கப்படும் அந்த பயங்கரமான காரியத்தின் மீது நான் ஜெயம் பெற்றேன்." அப்போது ஆபிரகாமுக்குப் பின்னால் ஒரு மனிதன் வந்தான். அந்த மனிதன் ஆபிரகாமின் தோள்பட்டைக்கு அருகில் பார்த்தபோது, அவனும் மருகிக் கொண்டு நின்றான். அவன் தானியேல் (Daniel) தீர்க்கதரிசி. அவன் சத்தமிட்டு "உலகத்தின் இராஜ்யங்களை அழிக்கும்படி, கைகளால் பெயர்க்கப்படாமல் உருண்டு வந்ததாக நான் கண்ட அந்தக் கல் இவர்தான்” என்றான். அப்போதே இன்னொரு மனிதன் வந்தான்; அவன் எசேக்கியேல் (Ezekiel) தீர்க்கதரிசி; அவன் இயேசுவைப் பார்த்த போது, “சக்கரத்துக்குள் சக்கரம் இருக்குமாப்போல் பூமியிலிருந்து உயர எழும்புவதைக் கண்டேனே!” அவர் தான் இவர் என்று கூறினான். ஒவ்வொரு வரும் அவரைப் பிரசங்கித்த விதத்தில் அவரைக் கண்டார்கள். பின்னர் மூன்று மனிதர்கள் ஓடிவந்து கர்த்தரைப் பார்க்க ஆபிரகாமைக் கடந்து போனார்கள். அவர்கள் சாத்ராக் (Shadrach) மேஷாக் (Meshach) மற்றும் ஆபேத்நேகோ (Abednego). அவர்கள் சத்தமிட்டு அழுது, "நேபுகாத்நேச்சார் எங்களை அக்கினியின் நடுவில் எறிந்த போது, எரியும் சூளைக்குள் எங்களுடன் நின்றவர் இவர்தான்” என்று கூறினர். ஓ! நண்பர்களே, இன்றிரவு நாம் அவரைப் பாடியுள்ளோம்; அவரைப் புகழ்ந்தோம்; அவருடைய வாழ்க்கை மற்றும் சரித்திரத்தை பூமியெங்கும் சொல்லியிருக்கிறோம். ஆனால் பள்ளத்தாக்கின் லீலியாகவும் (Lily of the Valley) சாரோனின் ரோஜாவாகவும் (Rose of Sharon) நம்முடைய ஆத்துமாக் களுக்குப் பதினாயிரங்களில் சிறந்தவராகவும், அல்பா (Alpha) மற்றும் ஓமெகாவாகவும் (Omega), ஆதியும் அந்தமுமான வராகவும், மகிமையின் ராஜாவாகவும் (King of Glory) நாம் அவரைப் பார்க்கும்போது அது எத்தனை மகிழ்ச்சியாய் இருக்கும். கர்த்தர் அவர்களை நோக்கி “என்னைப் பின்பற்றுங்கள்”, என்று கூறி, பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் அனைவரையும் பூமிக்கு மேலே அழைத்துச் செல்லத் தொடங்கினார்; அவர் அவர்களை வழிநடத்தினார். அவர் தமது சொந்த இரத்தம் தோய்ந்த வஸ்திரம் உடையவராய் மேலேயுள்ள வளிமண்டலத்தை (Atmosphere) ஜெயித்தார். அவருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! இழந்துபோன ஆதாமின் பிள்ளைகள் அனைவருமே ஜெபத்தின் மூலமாக ஜெயங்கொள்ளும்படி, அவர் பூமியைச் சுற்றியுள்ள நரகத்தின் மூடுபனியை நிர்மூலமாக்கி, ஆகாயத்தில் ஒரு வழியை உண்டாக்கினார். அவர் காலச் சூழ்நிலைகளை ஜெயித்தார்; அவர் பாவத்தை ஜெயித்தார்; மரணத்தை ஜெயித்தார்; நரகத்தையும் கல்லறையையும் ஜெயித்தவராய் உயிர்த்தெழுந்து மிக உயர்ந்த நட்சத்திரங்களுக்கு மேலாக, சந்திரனுக்கும் சூரியனுக்கும் அப்பால், அவர் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுடன் சென்றார். ஓ, ஒரு உண்மையான ஜெயவீரருடன் அவர்களின் அணிவகுப்பு எவ்வளவு கம்பீரமாக இருந்திருக்கும்! அவர்கள் அந்த மகிமையான நகரத்தைக் கண்டதும், ஆபிரகாம் சாராளிடம் "பிரியமானவளே இங்கே வா” என்று அழைத்தான். அவள் ஈசாக்கை அழைத்தாள், ஈசாக்கு யாக்கோபை அழைத்தான், யாக்கோபு யோசேப்பை அழைத்தான், அவர்கள் ஆபிரகாமின் பக்கம் வந்தபோது, அவன் சொன்னான்; தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரம் இதுதான். இந்த நகரத்தைத் தேடித்தான் பூமியெங்கும் நான் நடந்தேன்; ஆனால் அதை ஒருபோதும் கண்டு பிடிக்கவில்லை. இப்பொழுதோ நாம் மகத்தான வாசல்கள் அருகில் வருகிறோம்" அவர்கள் பெரிய மனிதர்களாக இருந்தபோதிலும், பாவத்தை வென்று, இந்த அழகான நகரத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல வல்லமையுள்ள ஜெயவீரர் தேவைப்பட்டது. நகரத்திற்குள் இருந்த வெளிச்சம் மிகச்சிறப்பாகவும் பிரகாசமாகவும் இருந்தது. முத்து பதிக்கப்பட்ட வாயில்கள் அனைத்தும் மின்னிக்கொண்டிருந்தன. அங்கு முன்னணியில் இயேசு நடந்து கொண்டிருந்தார். விரைவில் அனைத்து தேவ தூதர்களும் கட்டடங்களின் உச்சியில் ஏறி, அணிவகுத்துச் செல்லும் பெரிய சேனைகளைக் கீழே பார்த்தார்கள். அவர்கள் நெருங்கியபோது, பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள், வாசல்களே உங்கள் தலைகளை உயர்த்துங்கள், அநாதி கதவுகளே உயருங்கள், வல்லமையுள்ள ஜெயவீரராகிய மகிமையின் ராஜா உட்பிரவேசிக்கட்டும்” என்று பலத்த சத்தமிட்டார்கள். அப்பொழுது தேவதூதர்கள் மறுமொழியாக "யார் இந்த மகிமையின் ராஜா?” என்று சத்தமிட்டார்கள். பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள், "அவர் சேனைகளின் கர்த்தர். அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ளவர்” என்று உரக்கக் கூறினார்கள். அப்பொழுது வாசல்கள் திறவுண்டன. அவர் கதவுகளின் அருகில் பழைய கரடுமுரடான அந்தச் சிலுவையை (Old rugged Cross) வைத்தார். ஏனென்றால் அந்த வாயிலின் வழியாக வரும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அந்தச் சிலுவையின் முன் குனிந்து அவரை வல்லமையுள்ள ஜெயவீரராக அங்கீகரிக்க வேண்டும். இந்த மாபெரும் வல்லமையுள்ள போர் வீரர், பெரிய நகரத்தின் வீதியில் அணிவகுத்துச் செல்லும் போது, சிறை பிடித்தவர்களைச் சிறையாக்கி, மனிதர்களுக்கு வரங்களை அளித்ததற்காக ஆயிரமாயிரமான தேவதூதர்கள், அதிக சத்தத்தோடு கர்த்தரை ஆர்ப்பரித்துத் துதித்தனர். அடோல்ஃப் ஹிட்லரைப் போல் வெற்றி விழா வளைவில் அல்ல. ஆனால், உலகின் பாவங்கள் மீது வெற்றி சிறந்து நீதிமான்களை ஜெயங்கொள்ளச் செய்தபடியால், வல்லமையுள்ள ஜெயவீரராக வீதிகளில் செல்லும்போது விடிவெள்ளி நட்சத்திரமாகிய அவரை மகிமையில் தேவதூதர்கள் பாடிப் புகழ்ந்து துதித்தனர். அவர்கள் சிங்காசனத்திற்கு வரும்வரை, நகரத்தின் வழியாகச் சென்றார்கள். அங்கே சிங்காசனத்தில் வல்லமைமிக்க யேகோவா (Mighty Jehovah) அமர்ந்திருந்தார். இயேசு சிங்காசனத்திற்கு வந்ததும் முழங்கால் படியிட்டு, "பிதாவே நீர் எனக்குக் கொடுத்த வேலையை நான் முடித்து விட்டேன்; நான் பாவத்திற்கான பரிகாரத்தைச் செலுத்தி விட்டேன். மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்கள் என்னிடம் உள்ளன. உம்முடைய சத்துரு தோல்வியடைந்தான்; இந்த வேளைக்காகப் பொறுமையுடன் காத்திருந்த உம்முடைய பிள்ளைகள் இவர்கள்” என்று கூறினார். அதற்கு "என் மகனே, இங்கே என் சிங்காசனத்தில் ஏறி அனைத்துச் சத்துருக்களையும் நான் உனக்குப் பாதபடியாக்கும் வரை நீர் இங்கே உட்காரும்” என்று பிதா சொல்வதாக நான் காண்கிறேன். இயேசு அங்கே வல்லமையுள்ள ஜெயவீரராக அமர்ந்திருக்கிறார். அவருடைய வார்த்தையை நம்பி, அவர் சொல்லும் அனைத்தையும் நம்பி, எனக்கு எல்லாமாக அவரை நம்பி, என் சுவாசமாக, என் ஜீவனாக நம்பி இன்றிரவு நான் அவரிடம் என்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கிறேன். என் ஆவி, ஆத்மா மற்றும் என் சரீரத்தை அவரிடம் ஒப்புக்கொடுத்து, மகிமையில் அவர் வருவதை எதிர்பார்க்கிறேன். நான் சோகமாக இருக்கும்போது அவரை நம்புவேன், நான் மகிழ்ச்சியாக இருக்கும்போதும் அவரை நம்புவேன், நான் நோய்வாய்ப் பட்டிருக்கும் போதும் அவரை நம்புவேன், நான் தொலைந்து போனாலும் அவரை நம்புவேன், எனக்கு என்ன நேர்ந்தாலும் நான் அவரை நம்புவேன். சில காலத்திற்கு முன்பு நடந்த ஒரு சிறிய சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. இதை நான் இதற்கு முன்பு பொது இடத்தில் கூறியதில்லை. நான் அடிரோண்டாக் மலைகளில் (Adirondack Mountains) வேட்டையாடிக் கொண்டிருந்தேன். என் அம்மா ஒரு வகையில் இந்தியர், நான் காடுகளையும் மலைகளையும் நேசிக்கிறேன்; அவைகள் என் பொழுது போக்கு. மற்றொரு நாள் நான் என் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன், "பிரியமே நான் செய்த எல்லாவற்றிலும் தேவன் எனக்கு உதவியாயிருந்தார். நான் ஒரு ஏழை மீனவன், ஆனாலும் மீனவர் ஒருபோதும் சென்றிராத மிக மர்மமான இடங்களுக்குச் சென்று சில தேசிய சாதனைகளை நான் பதிவு செய்திருக்கிறேன். இது தேவனுடைய செயல். நான் நன்றாகச் சுடத் தெரியாதவனாக இருந்தபோதே ஒட்டு மொத்தமாக 600 மற்றும் 700 கெஜதூரத்திலுள்ள பொருளைத் துப்பாக்கியால் தொடர்ச்சியாக 33 முறை தாக்கிச் சாதனை படைத்துள்ளேன். இது தேவனுடைய செயல்! நான் ஒரு மிகச்சிறந்த வேடன் என்று நினைத்தேன். என்னால் ஒருபோதும் காட்டிற்குள் தொலைந்து போக முடியாது என்று நினைத்தேன். நான் அப்பொழுது தான் திருமணம் செய்திருந்தேன். அப்போது பில்லி ஒரு சிறு பையன் அவனது தாய் இறந்து சுமார் ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. நான் என் மனைவி மேடாவையும் (Meda) என் மகனான பில்லியையும் (Billy) அடிரோண்டாக் மலைக்கு அழைத்துச் சென்றேன். நாங்கள் அங்கே மலையடிவாரத்திலுள்ள கட்டடத்தின் (Cabin) சாய்வான கொட்டகையில் தங்கி யிருந்தோம். ரேஞ்சர் மேலே வரும் வரை காத்திருந்தேன். நான் என் மனைவியிடம், "நான் வெளியே சென்று மானை வேட்டையாடி அதன் இறைச்சியைக் கொண்டு வருகிறேன் என்று சொன்னேன். நீங்கள் இங்கே காத்திருங்கள், ரேஞ்சர் வரும்போது அவர் உங்களுக்காக அறையைத் திறப்பார்.” ஆகவே நான் அவர்களை அந்தக் கட்டடத்தின் சாய்வான கொட்டகையில் விட்டு விட்டு காட்டுக்குள் செல்ல ஆரம்பித்தேன். நான் சென்ற மலைகள் வழியாக உள்ள பாதையில் ஒவ்வொரு மரத்தையும் எனக்கு நன்றாகத் தெரியும் என்று நான் நினைத்தேன். ஆனால், உங்களுக்கு ஏதாவது தெரியும் என்று நீங்கள் நினைக்கும் இடத்திற்கு நீங்கள் வரும்போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எதுவும் உங்களுக்குத் தெரியாது. நான் இந்தப் பாதையைப் பின்பற்றி காட்டில் அதிகமாக வேட்டையாடினேன். பின்னர் கடைசியாக நான் கண்காணித்து வந்த பெரிய மானைப் பின் தொடர்ந்து வந்து, அதைச் சுட்டுக் கொன்றேன். நான் திரும்பி செல்வதற்கான நேரம் வந்துவிட்டது. மேடாவிற்கு நான் இரண்டு மணிக்குத் திரும்புவேன் என்று உறுதியளித்தபடியால், நான் மானைத் தோலுரித்து அதை அங்கே விட்டுவிட்டு கேபினை நோக்கிச் செல்ல ஆரம்பித்தேன். நான் வெளியேறும்போது பனியும் மூடுபனியும், பள்ளத் தாக்குகளில் இறங்குவதைக் கவனித்தேன். ஆனாலும் நான் நடந்து கொண்டே இருந்தேன். இறுதியாக, நீண்ட நேரம் கழித்து நான் அந்த மான் இருந்த இடத்திற்கே திரும்பி வந்தேன். இதனால் நான் மிகவும் மனஉளைச்சல் அடைந்தேன். எனவே, நான் மீண்டும் தொடங்கினேன். மீண்டும் மான் இருக்கும் இடத்திற்கே திரும்பியிருந்தேன். இந்தியர்கள் இதை மரண நடை (Death Walk) என்று அழைக்கிறார்கள். நீங்கள் வட்டமிட்டு நடந்து கொண்டே இருப்பீர்கள். இந்த நேரத்தில் காற்று அதிகமாக இருந்தது. மலைகளில் மூடுபனி இறங்கும்போது உங்களுக்கு முன்னால் உள்ள உங்கள் கையைக்கூடப் பார்க்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். செய்ய வேண்டிய ஒரே விஷயம், எங்காவது சென்று, துளையிட்டு, உங்களால் முடிந்தால் சாப்பிட ஏதாவது கண்டுபிடித்து மூடுபனி நீங்கும் வரை அங்கேயே இருக்க வேண்டும். ஆனால் என்னால் அதைச் செய்ய முடியவில்லை, ஏனென்றால் அந்தக் காடுகளில் என்னுடைய மனைவியும் குழந்தையும் இருந்தார்கள். அவர்கள் அந்தப் பனிப்புயலில் இறந்து விடுவார்கள். அதனால் என்னால் அதைச் செய்ய முடியவில்லை. நான் மீண்டும் முயற்சிக்க வேண்டியிருந்தது. நான் போகவேண்டும் என்று நினைத்த அளவுக்கு நான் சென்ற பிறகு, "சரி நான் தொலைந்து விட்டேன்!” என நினைத்தேன். பின்னர் நான் நினைத்தேன், "ஒரு நிமிடம் பில் பிரன்ஹாம், காத்திரு, நீ தொலைந்து போகவில்லை, நீதான் அப்படி நினைக்கிறாய் ஒரு நிமிடம் உட்கார்ந்து பொறுமை யோடிரு. நான் உட்காரத் தொடங்கியதும், பனிப்பொழிவு மற்றும் காற்று, மரங்களை முறுக்கி அவற்றை விழத்தள்ளும்போது, என் மனைவி மற்றும் குழந்தையைப்பற்றி மீண்டும் நினைத்தேன். மேடா தனது வாழ்க்கையில் நகரத்தில் இருந்ததைத் தவிர, ஒரு போதும் நகரத்திற்கு வெளியே இருந்ததில்லை. நான் மலைகளில் தொலைந்துபோன பின் அவள் என்ன செய்வாள்? அவள் திணறிப் போவாள், அவளும் என் குழந்தையும் இறந்து விடுவார்கள். ஆனால் நான் சொன்னேன்,"ஒ நீ தொலைந்து போக முடியாது நீ ஒரு சிறந்த வேடன்." இப்போது உள்ளுணர்வு இந்த வழியில் செல்லச் சொல்கிறது. ஏனென்றால், மலையின் மேலே வந்தபோது காற்று உங்கள் முகத்திற்கு எதிரே வீசினால், இப்போது நீங்கள் திரும்பி மலையிலிருந்து கீழே இறங்கும் போது அது உங்கள் முதுகின் மீது வீச வேண்டும். எனவே நான் மீண்டும் தொடங்கினேன். ஏதோ ஒன்று எனக்குள் பேச ஆரம்பித்தது. "நான் ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.” நான் என் அருகில், என்னிடம் பேசும் ஒரு குரலைக் கேட்க முடிகிறது. நான் தலையை அசைத்து, "வா எழும்பி உன்னை ஆயத்தமாக்கிக் கொள்; தொடர்ந்து செல்; நீ உன் முகாமுக்கு நேராகச் செல்” என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். ஆனால் நான் தவறு செய்தேன். நான் அறியாமல் கனடாவுக்கு (Canada) நேராகச் சென்று விட்டேன். அந்தச் சத்தம், "நான் கர்த்தர், நான் ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்” என்று பேசிக்கொண்டே இருந்தது. அது எனக்குள் ஆழமாகவும் தீர்க்கமாகவும் பேசிக்கொண்டிருந்ததால் நான் ஒரு மரத்திற்கு எதிராக என் துப்பாக்கியைச் சாய்த்து, நான் என் பழைய வேட்டைத் தொப்பியைத் தரையில் வைத்து, மண்டியிட்டு, "ஆண்டவரே நான் ஒரு வேடன் அல்ல; நான் ஒரு தொலைந்து போன, பரிதபிக்கப்பட்ட நிர்பாக்கியமான மனிதன். நான் வாழத்தகுதியானவன் அல்ல; ஆனால் தயவுசெய்து என் மனைவி மற்றும் குழந்தையின் மீது இரக்கமாயிரும்! நான் எந்தப் புயலையும் வெல்ல முடியும், எந்தக் காடுகளையும் வெல்ல முடியும் என்று நினைத்தேன்; ஆனால் நான் ஒரு ஜெயவீரன் அல்ல என்பதைக் கண்டு கொண்டேன். நான் ஜெபிக்கும்போது அதை உணர்ந்தேன். நான் என் காலூன்றி எழுந்து மீண்டும் முன்னேற ஆரம்பித்தேன். வல்லமையுள்ள ஜெயவீரர் என் தோளின்மீது கை வைத்ததை நான் உணர்ந்தேன், திடுக்கிட்டேன்! நான் அந்தக் காட்டில் தனியாக இருந்ததால், யார் என் தோளில் கை வைத்தார்கள் என்று பார்க்கத் திரும்பினேன்; ஆனால் அங்கே யாரும் இல்லை. ஆனால் நான் பின்னோக்கிப் பார்த்த போது மலையின் மேல் கோபுரத்தைப் (Tower) பார்த்தேன். அது இந்தக் காடுகளில் நான் எப்போதும் பயன்படுத்திய ஒரு அடையாளமாகும். ரேஞ்சரும் நானும் அந்தக் கோபுரம் வரை தொலைபேசிக் கம்பிகளைக் (telephone wire) கொண்டு செல்ல அவருக்கு உதவியாக இருந்தேன். ஆகவே அந்தக் கம்பி வழிப்பாதையை நன்கு அறிவேன். கோபுரத்தை மீண்டும் பார்த்தபோது, என்னை அறியாமலேயே நான் மரணத்தின் விளிம்புவரைச் சென்றதை உணரமுடிந்தது. ஆனால் "ஆபத்துக்காலத்தில் அவர் அனுகூலமான துணையுமானவர்.” அது என்ன? கோபுரத்தை நான் பார்க்கும்படி அவரது வல்லமையுள்ள கை பனியைத் திருப்பியது. அவர் தான் சீடர்களுக்காகக் காற்றையும் கடலையும் வென்றார். இப்பொழுது எனக்காக இந்தப் புயலையும் வென்றார். என் போன்ற ஒரு மோசமான பாவியைக் காப்பாற்ற ஒரு வலிமையான புயலை நிறுத்தினார். நான் என் முகத்தை அந்த கோபுரத்தை நோக்கித் திருப்பி நேராகச் சென்று கொண்டிருந்தேன். அது மிகவும் இருட்டாக இருந்தது. ஆனால் கோபுரத்தின் திசையிலிருந்து என் முகத்தைத் திருப்பவில்லை. கோபுரத்திலிருந்து கேபினுக்குச் சென்ற கம்பியை நான் இப்போது தொடுவேன் என்று அறிந்திருந்தேன். அதனால் கேபினின் அருகிலுள்ள அந்தச் சாய்வான கொட்டகையில் இருக்கிற என் மனைவியையும் மகனையும் கண்டுபிடிப்பேன். நான் நடந்து செல்லும்போது, "நான் என் தேவனை நம்புகிறேன், நான் அவருடைய வார்த்தையில் நிற்கிறேன்” என்று பாடிக்கொண்டே இருந்தேன். "ஓ அந்தத் தொலைபேசிக் கம்பியை என்னால் தொட முடிந்தால்” என்று நினைத்தேன். மேலும் என் கையை மேலே உயர்த்திக் கொண்டே தொடர்ந்து நடந்து கொண்டிருந்தேன். நான் அந்தத் தொலைபேசிக் கம்பியின் கீழ் கடந்து செல்லும்போது அந்தக் கம்பியை நான் தொட நேரிடும் என்பதை அறிந்திருந்தேன். நான் என் நம்பிக்கையை இழக்கும் நேரத்தில் ஏதோ ஒன்று என் கையைத் தாக்கியது. அதுதான் அந்தக் கம்பி. நான் அந்தக் கம்பியின் மேலுள்ள என் பிடியை விடமாட்டேன் என்று சொல்லி என் துப்பாக்கியைக் கீழே எறிந்தேன், என் தொப்பியைக் கழற்றினேன்; அங்கே இருட்டில் ஒரு குழந்தையைப்போல அழுதேன். ஏனென்றால் தேவன் எனக்கு உதவினார் என்பதையும், அந்தக் கம்பியின் முடிவில் என் மனைவியும் குழந்தையும் காத்திருக்கிறார்கள் என்றும் எனக்குத் தெரியும். நான் மலையிலிருந்து கீழே இறங்கும் வழிமுழுவதும் அந்தக் கம்பியைப் பிடித்துக் கொண்டே இருந்தேன். என் அன்புக்குரியவர்களிடத்திற்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்தேன். சகோதரரே, ஒருநாள் நான் அதைவிட மோசமாக நம்பிக்கையை இழந்தவனாக இருந்தபோது, ஒரு சத்தம் என்னிடம் பேசுவதைக் கேட்டேன், "நான் இன்னும் உன் எல்லா பாவங்களையும் நீக்கக்கூடிய வல்லமையுள்ள ஜெயவீரர்” என்று கூறியது. என் தலையிலிருந்து கால்வரை என்னை அசைத்த சர்வ வல்லமையுடைய தேவனுடைய வல்லமையை நான் பற்றிக்கொண்டேன். நான் அவரைப் பற்றிக்கொண்டே இருப்பேன். ஏனென்றால் இந்த வாழ்க்கையின் முடிவில் என் இரட்சகர் காத்திருக்கின்றார். என் அன்புக்குரியவர்களும் காத்திருக்கிறார்கள். சிலுவையிலிருந்து மகிமைக்குச் செல்லும் கம்பியைப் பிடித்துக்கொண்டு, நான் மரிக்கும்வரை அவரை நம்புவேன். ஏனென்றால் அவர் என் எதிரிகளையெல்லாம் ஜெயித்தார்; அவர் என் வியாதிகளை ஜெயித்தார்; அவர் என் பாவங்களை ஜெயித்தார்; மேலும் எனக்காக எல்லாவற்றையும் ஜெயித்து அவர் என்னைக் "கிறிஸ்துவுக்குள் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவனாக” மாற்றியிருக்கிறார். ஓ, பாவத்தில் உழன்று கொண்டிருக்கும் என் நண்பரே நீங்கள் தொலைந்து போயிருந்தால், உங்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லும் அவருடைய கையைப் பிடிக்க வேண்டுமானால், இப்போதே அதற்கான நேரம்! இந்த வாழ்க்கையின் புயல்கள் உங்களை மேற்கொண்டுவிடும்; நீங்கள் என்றென்றும் தொலைந்து போவீர்கள். நாம் எனவே தலையைத் தாழ்த்தி ஜெபிக்கும்போது, நீங்கள் அவரைப் பிடித்துக் கொள்ளுங்கள். இந்தச் சிறிய புத்தகத்தை உங்களிடம் கொண்டு வருவதற்கு உதவியாக என்னுடன் பணிபுரிந்த லியோ மெர்சியர்(Leo Mercier) மற்றும் இயக்குநர்களின் ஒத்துழைப்புக்கும் விருப்பத்திற்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். தேவனுடைய ராஜ்யத்தின் விரிவாக்கத்திற்கு உதவியாக இருக்கும். வில்லியம் பிரன்ஹாம் 7.ஜோலியட், இல்லினாய்ஸிலிருந்து மிஸ் ரோசெல்லா கிரிஃபித் எழுதியது (By Miss Rosella Griffith of Joliet, Illinois) என் சாட்சியை இங்கே கூற விரும்புகிறேன். ஏனென்றால் "நீங்கள் போய் எனக்குச் சாட்சியாக இருங்கள்” என்று இயேசு சொல்லியிருக்கிறார். மேலும் ஆட்டுக்குட்டியின் இரத்தத் தினாலும், நம்முடைய சாட்சியின் வசனத்தினாலும் நாம் ஜெயிக்கிறோம். நான் பழைய சுயத்தில் இருந்தால் இதுபோன்ற ஒரு சாட்சியை என்னால் கொடுக்க முடியாது. ஆனால் நான் என்னுள் இல்லை, நான் கிறிஸ்து இயேசுவில் இருக்கிறேன். நான் ஒரே மகளாக இருந்து வளர்ந்தேன். எனக்கு நினைவு தெரியும்வரை, நான் சந்தோஷமாக இருக்கும்படி ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டே இருந்தேன். நான் தொடர்ந்து தேடிக்கொண்டே இருந்தேன். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நான் அமைதியையும் மகிழ்ச்சியையும் மற்ற தேடிக்கொண்டிருந்தேன். நான் அருகிலுள்ள பிள்ளைகளுடன் விளையாட வேண்டியிருந்தது; ஆனால், நான் அவர்களுடன் ஒருபோதும் ஒத்துப்போகமுடியாது என்று தோன்றியது. தெற்கு இல்லினாய்ஸில் உள்ள எங்கள் சிறிய நகரத்திலுள்ள மெதடிஸ்ட் சபைக்கு (Methodist Church) ஒரு சிறு பிள்ளையாக நான் அனுப்பப்பட்டேன். எனக்கு ஆறு வயதாக இருந்தபோது, நான் என் பாட்டியுடன் எழுப்புதல் கூட்டத்திற்குச் சென்றேன். என் இதயத்தை இயேசுவுக்குக் கொடுப்பதற்காக தொடர் கூட்டங்களுக்குச் சென்றேன். ஆனால் யாரும் எனக்கு உதவவில்லை. நான் அவருக்காக வாழவில்லை என்று பயப்படுகிறேன். நான் ஞாயிறு பள்ளி மற்றும் சபைக்குச் சென்றேன்; கோடை விடுமுறையில் எங்கள் சபையிலிருந்து இளைஞர் முகாமுக்குச் சென்றேன். ஆனால், இவை அனைத்தினாலும் இயேசுகிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக நான் அறிந்து கொள்ளவில்லை. (இயேசுவைப் பற்றிய கதைகள் எனக்குத் தெரியும், ஆனால் இந்த நேரத்தில் எனக்கு உண்மையில் அவரைத் தெரியாது.) பின்னர் நாங்கள் வேறொரு நகரத்துக்குச் சென்றோம். உயர்நிலைப்பள்ளியில் பட்டம் பெற்றப் பிறகு, ஒரு அலுவலகத்தில் வேலை செய்யத் தொடங்கினேன். வாரத்தில் ஆறு மற்றும் ஏழு நாட்கள், மாலை 3 முதல் 11 மணி வரைக்கான மாற்றுப்பணி அது. எங்களுடைய விடுமுறை நாட்களில், நாங்கள் ஒன்றாக வெளியே செல்வோம். பலமுறை நாங்கள் சிக்காகோவுக்குச் (Chicago) சென்றோம். நாங்கள் வாழ்க்கையை அனுபவிக்கின்றோம் என்று எண்ணினோம். நாங்கள் நடனமாடுவோம், மது குடிக்கவும் செய்வோம். என்னுடன் இருந்தவர்கள் குடிப்பதை நிறுத்த விரும்பும்போது அவர்களால் நிறுத்த முடியும். ஆனால் என்னால் முடியவில்லை. நான் அவர்களைவிட கூடுதல் பானங்களை ஆர்டர் செய்வேன்; நான் ஒழுக்கக்கேடானவள் அல்ல. ஆனால், தேவனுடைய பார்வையில் ஒரு குறிப்பிட்ட பாவம் இன்னொரு பாவத்தைப் போலவே பெரியது. எனது சொந்த விருப்பத்திற்கு அப்பாற்பட்டு எதையோ செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறேன் என்ற உண்மையை எண்ணி நான் வெறுப்படைந்தேன். 1949 ஆம் ஆண்டில், நான் ஒரு குடிப்பழக்கம் உள்ளவள் என்று எனக்குத் தெரியும். (அதை நானே கூட ஒப்புக்கொள்ள விரும்பவில்லை). நான் ஏணியின் அடிப்பகுதியில் இருந்தேன்; அது எனக்கு நம்பிக்கையற்ற நிலையாகத் தெரிந்தது. என் பெற்றோர் எனக்கு உதவ விரும்பினர், ஆனால் என்னை எப்படிச் சமாளிப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அவர்கள் இருவரும் மது அருந்தமாட்டார்கள். என் இதயத்தில் நான் சுதந்திரமாக இருக்க விரும்பினேன், குடிப்பதை நிறுத்த எல்லா முயற்சிகளையும் எடுத்தேன். ஆனால் எதுவும் என் குடிப் பழக்கத்தை அகற்றவில்லை. கடைசியாக நான் குடிகாரர்களுக்கான மறுவாழ்வு மையத்திற்குச் செல்ல முடிவு செய்தேன்.அவர்கள் எனக்கு உதவக்கூடும் என்று நினைத்தேன். உண்மையில், இந்த மையத்தில் நான் மகிழ்ச்சியடையவில்லை. இருப்பினும் நான் அவர்களது கூட்டங்களுக்கு ஒன்பது மாதங்களாகத் தொடர்ந்து செல்வதன் மூலம் குடிக்காமல் இருந்தேன். தேவன் என்னை நிதானமாக வைத்திருக்கும்படி ஒவ்வொரு நாளும் என் படுக்கையின் அருகில் ஜெபம் செய்தேன். அவர் என்னை நிதானமாக வைத்திருந்தார். ஆனால் நான் மகிழ்ச்சியாகவோ சுதந்திரமாகவோ இல்லை. நான் குடிகாரர்களுக்கான மறுவாழ்வு மையத்தில் சேருவதற்கு முன்பு, மருத்துவர்கள் நான் உள்ளே வருவதைக் கண்டு சலித்துப் போகும் வரை நான் மருத்துவமனைக்கு வருவதும் போவதுமாக இருந்தேன். நான் சிகாகோவில் உள்ள ஒரு குடிகாரர்களுக்கான மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு ஐந்து நாட்களுக்கு 150 டாலர் செலவாகும். அதிகரித்துவரும் மருத்துவமனை மற்றும் மருத்துவத்திற்கான செலவுகளைச் சமாளிக்கும் அளவிற்கு நாங்கள் செல்வந்தர்கள் அல்ல. என் வாழ்க்கையின் இந்த காலகட்டத்தில், நான் மிகவும் பலவீனமாக இருந்தேன். உடல் எடை குறைந்து, பார்வைக்குப் பரிதாபமாக இருந்தேன். ஐந்து மருத்துவர்கள் என்னை முற்றிலுமாகக் கைவிட்டு விட்டார்கள். ஒரு மருத்துவர், ஆறு மாதக்காலத்திற்குள் நான் ஒரு மனநல நிறுவனத்தில் இருப்பேன் என்று கூறினார். அக்கம்பக்கத்தினர் என்னைக் கைவிட்டனர். ஊழியர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு ஊழியக்காரர் வந்து என்னுடன் வேதவசனங்களைப் பற்றிப் பேசி நியாயப்படுத்த முயன்றார். எனக்குத் தேவையானது சீஷர்களைப் போலவே செய்யக்கூடிய ஒருவர்; இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் மது என்ற பிசாசுக்குக் கட்டளையிட அது நீங்க வேண்டும். நான் ஒருக்காலும் மாறமாட்டேன் என்று சொல்லி என் தகப்பனார் என் தாயிடம் எனக்காக ஜெபிப்பதைக் கைவிடும்படிச் சொன்னார். அவர்கள் அவருக்குச் செவிகொடுக்கவில்லை. "ஒருவேளை நான் மாற்ற முடியாமலிருக்கலாம், ஆனால் தேவன் அவளை மாற்ற முடியும்" என்று கூறினாள். நான் குளிரில் நனைந்தால் உறைந்து போய்விடுவேன் என்று நினைத்து, என் தாய் எனக்கு ஒரு ஃபர் கோட் (Fur Coat) வாங்கினார். நான் கோட்டின் பாக்கெட்டுகளைக் கிழித்து, கோட்டின் உட்புறம் முழுவதும் மதுபாட்டில்களை வைத்தேன். நான் மாறமுடியாது என்று எல்லோரும் சொன்னபோது தேவனுடைய வார்த்தையைப் பிடித்துக் கொண்டு என் அம்மா என்னுடன் நின்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நான் அவர்களை இழிவு படுத்தினாலும், நான் ஏன் அப்படிச் செய்கிறேன் என்று அவர்களுக்குப் புரியவில்லை. என்றாலும் அவர்கள் இன்னும் எனக்கு உறுதுணையாக நின்றார்கள். நான் குடிக்க ஒரு மதுகோப்பை அல்லது கண்ணாடிக் குவளையை வெளியே எடுத்தபோது நான் நடுங்க ஆரம்பித்தேன். ஒரு சிறிய நாய்க்குட்டி போல அதன்மேல் ஆவலாய் இருந்தேன். நான் கத்தோலிக்கத்தை நம்பவில்லை என்றாலும், மன அமைதிக்காக கத்தோலிக்கத்திற்கு மாறினேன். எனக்கு உதவி தேவை என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால் அவர்கள் கிறிஸ்துவுக்கு நேராக என்னை வழிநடத்தவில்லை. மொத்தத்தில் என் அம்மாவைத் தவிர பூமியிலுள்ள எல்லோரும் என்னை நம்பிக்கையற்றவர்களாக விட்டு விட்டார்கள். நான் மிக மோசமாக இருந்தபோது, என் அம்மா, நான் இரட்சிக்கப்படுவதாகவும் ஒரு பிரசங்க பீடத்தின் பின்னால் நின்று ஒரு வேதபுத்தகத்தை (Bible) நான் திறப்பது போலவும் தன் தரிசனத்தில் கண்டதாகக் கூறினார்கள். அவர்கள் தேவனை விசுவாசித்தார்கள். தேவன் அவர்களுக்கு ஒரு தரிசனத்தில் வெளிப்படுத்தியதால், பூமிக்குரிய ஐந்து மருத்துவர்களை நம்பியதை விட, அவர்கள் தேவனை அதிகமாக நம்பினார்கள். பின்னர் இந்தத் தரிசனம் நிறைவேறியது. மிக மோசமான நிலையில் இருந்தபோது, ஒரு மருத்துவர், நான் என் கடைசி மூச்சை விடும்வரை என் படுக்கையின் அருகில் இரவு முழுதும் காத்திருந்தார். ஆனால் நான் இறந்துவிடமாட்டேன் என்றும் தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்த வாழ்வேன் என்றும் அறிந்திருந்த, அந்த மருத்துவரைவிட ஒரு பெரிய மருத்துவர் அங்கே நின்றுகொண்டிருந்ததால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். "திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” என்று இயேசு சொல்லி யிருக்கிறார். வாழ்க்கையின் மிகவும் இருளான நேரத்தில் ஒரு ஒளியின் கதிரைத் தடவிக் கொண்டிருக்கும் போது, இந்தியானாவின் ஹம்மண்டில் (Hammond, Indiana) நடந்த ஒரு கூட்டத்தைப் பற்றி சிலர் என்னிடம் சொன்னார்கள். அங்கு தேவனுடைய தீர்க்கதரிசி கனம்பொருந்திய வில்லியம் பிரன்ஹாம் (Prophet of God, Rev. William Branham) நோயுற்றவர்களுக்காக ஜெபிக்கும் போது, அங்கு கால் ஊனமுற்றவர்கள் நடக்கின்றனர்; குருடர் பார்வையடை கிறார்கள்; கிறிஸ்துவின் நாமத்தில் புற்றுநோய்கள் குணமாகின்றன; அற்புதங்கள் செய்யப்படுகின்றன என்று அறிவித்தனர். நான் இந்த வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டேன். ஏனென்றால், இப்படிப்பட்ட ஜனங்கள் நிச்சயமாக குணமடைய முடியுமானால் நானும் குணமடைய முடியும் என்று நினைத்தேன். கூட்டம் பற்றி என்னிடம் கூறப்பட்ட பின்னர், மூன்றாம் நாள் நாங்கள் கூட்டத்திற்குச் சென்றோம். ஜூலை11,1952 அன்று என் அம்மாவும், அவர்களுடைய நண்பரும், நானும் கூட்டம் நடைபெறும் சிவிக் மையத்திற்குச் (Civic Centre) சென்றோம். ஜனங்கள் தேவனைப் புகழ்ந்து பாடுவதை நான் கண்டேன். அவர்கள் நிச்சயமாகவே மகிழ்ச்சியாக இருப்பதை நான் உணர்ந்தேன். (எனது மூக்குக் கண்ணாடியின் ஓரத்தின் வழியாக அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் பார்த்தேன். எனக்குச் சுகம் கிடைத்தால் அவர்களுடன் செல்வேன் என்று நினைத்தேன்). இயேசுகிறிஸ்துவுக்குச் சேவை செய்வதில் உண்மையில் மகிழ்ச்சி இருக்கிறது என்பதை நான் பின்னர் கண்டுபிடித்தேன். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததில் ஆச்சரியமில்லை. மதியக் கூட்டத்திற்குப் பிறகு நாங்கள் திரும்பி வந்தோம். எனக்கு ஒரு ஜெப அட்டை கிடைத்தது. கூட்டத்தைக் குறித்து நான் வைத்திருந்த ஒரு காரியம் என்னவென்றால் "இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்" என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். நான் ஒரு நவநாகரீக சபையில் வளர்க்கப்பட்டபடியினால் சுகமாக்குதலைப்பற்றிக் கூறும் ஒரு வசனத்தைக் கூட நான் அறிந்திருக்கவில்லை. அண்ட சராசரங்களையும் அதன் அதிசயங்களையும் உருவாக்கிய தேவன் என்னையும் உருவாக்கியிருந்தால், என் சரீரத்தைக் குணப்படுத்துவது அவருக்கு ஒரு அற்ப விஷயமாக இருக்கும் என்று மட்டுமே நினைத்தேன். நான் தலைகுனிந்து, என்னைச் சுகப்படுத்துவது தேவனுடைய விருப்பமாக இருக்குமானால் ஒரு வழியைக் கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு அவரிடம் கேட்டேன். அவ்வளவுதான் நான் சொன்னேன். “அவருடைய தழும்புகளால் நாம் குணமடைகிறோம்" என்று வேதம் சொல்வதை நான் அறியவில்லை. சகோதரன் பிரன்ஹாம் வந்து பிரசங்கித்தார். பிரசங்கத்திற்குப் பின் சகோதரன் பிரன்ஹாம் J 25 லிருந்து J 50 வரையுள்ள ஜெப அட்டைகளை அழைத்தார். என்னுடைய எண் J 27 வரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்தது, இந்த தேவனுடைய மனிதனுக்கு முன்னால் நின்றால் நான் சுகமடைவேன் என்று அறிந்து கொண்டேன். நான் வரிசையில் வந்தபோது நான் இருளில் இருப்பதைப் பார்த்ததாகச் சகோதரன் பிரன்ஹாம் கூறினார். அவர் "நீங்கள் தேவனுடைய தீர்க்கதரிசியை விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டார். நான் ஆம் என்றேன். சகோதரன் பிரன்ஹாம் "உங்களுக்கு என்ன பிரச்சனை என்று தேவன் எனக்கு வெளிப்படுத்தி, இயேசு உங்களைச் சுகமாக்கினால், உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் இயேசுவைச் சேவிப்பீர்களா?” என்று கேட்டார். நான் ஆம் என்றேன். சகோதரன் பிரன்ஹாம் பார்வையாளர்களைப் பார்த்து தலையைத் தாழ்த்தும்படிச் சொன்னார்; அவர் என் தலையில் கை வைத்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், எனக்குள் இருந்த குடிவெறி பிசாசைக் கண்டித்தார்; நான் மேடையிலிருந்து விடுதலைப் பெற்றவளாகச் சென்றேன். என் வாழ்க்கையில் முதல் முறையாக நான் விடுதலை அடைந்து விட்டேன் என்பதை அறிந்து கொள்வதில் மிகவும் சந்தோஷமாக உணர்ந்தேன். "குமாரன் உங்களை விடுதலையாக்கினால், மெய்யாகவே நீங்கள் விடுதலையாவீர்கள்." மற்ற அனைவருக்கும் ஒரு பிரச்சனையாக இருந்த என்னை, இயேசு கிறிஸ்து சில நொடிகளில் சுகப்படுத்தினார்; அவருடைய பரிசுத்த நாமத்தைத் துதியுங்கள். நான் அந்த மேடையை விட்டு இறங்கியதும், எனக்குள்ளேயே ஒரு கூட்டம் நடப்பதுபோல் இருந்தது. நான் கிறிஸ்துவில் எவ்வளவாய் மகிழ்ச்சியடைந்தேன்! (ஏனென்றால் என் வாழ்நாள் முழுவதும் நான் அதற்கு ஏங்கினேன்). ஒரு பெண்மணி என்னிடம் வந்து, அவள் என்னைக் குறித்து மிகவும் வருந்துவதாகக் கூறினாள். இயேசு என் சரீரத்தைச் சுகப்படுத்தியதால் நான் நன்றாக இருக்கிறேன் என்றும் அவள் அவ்வாறு வருத்தப்பட வேண்டியதில்லை என்றும் கூறினேன். நான் அவளுடைய மகளை இங்கே அழைக்கும்படி அவள் என்னிடம் வருந்திக் கேட்டுக்கொண்டாள். அவளுக்கு என்ன பிரச்சனை என்று மூன்று முறை கேட்டேன். அவள் போதை மருந்திற்கு அடிமையானவள் என்று கூறினாள். எஃப்பிஐ (FBI) கூட பல மாதங்களாக அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவள் இப்போது வீட்டிற்கு வந்துவிட்டாள். அவள் ஃப்ரெட் அஸ்டேருடன் (Fred Astair) ஒரு நடனக் கலைஞராக இருந்தாள். அவளுக்கு இப்பொழுது உதவி தேவைப்படுகிறது. அவள் அவளுடைய தொலைபேசி எண்ணை எனக்குக் கொடுத்தாள். அவள் அந்த எண்ணில் தொடர்புகொண்டு அழைக்கச் சொன்னாள். ஜனங்கள் அவளை அழைக்க வேண்டாமென்று சொன்னார்கள். என் அம்மாவும், மறுபடியும் அவளோடு சேர்ந்து நான் தவறான வழியில் போகாதபடி அவளை அழைக்க வேண்டாம் என்று சொன்னார். அந்த இரவு, நான் சுகமடைந்த பிறகு, இந்தியானாவின் ஹம்மண்டிலிருந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் நாங்கள் காபி அல்லது ஐஸ்கிரீம் சாப்பிட வாகனத்தை நிறுத்தினோம். (நான் என்ன சாப்பிட்டேன் என்று என்னிடம் கேட்காதீர்கள்; எனக்கு நினைவில் இல்லை. நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன் என்பது மட்டும் எனக்குத் தெரியும்). அந்த இரவில் நான் தேவனிடத்தில் வந்து, நான் இரட்சிக்கப்பட்டுவிட்டேன் என்று எனக்குக் காட்டும்படி அவரிடம் கேட்டேன். ஏனென்றால், நான் சுகமாகிவிட்டேன் என்று எனக்குத் தெரியும். நான் அவருக்கு விரோதமாக செய்த ஒவ்வொரு பாவத்தையும் மன்னிக்கும்படி மனம்வருந்தி தேவனிடத்தில் கேட்டேன். அங்கே என் படுக்கையில் என் கைகளை விரித்தபடி, சுமார் 10 நிமிடங்கள் காத்திருந்தேன். என் ஆத்துமா என் உடலை விட்டு வெளியேறி, மேற்கூரைவரை சென்றது; நான் பயந்து என் அம்மாவை அழைத்தேன். இரட்சிக்கப்பட்டுவிட்டேன் என்று அவர்கள் சொன்னார்கள் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மறுநாள் காலையில் இரட்சிக்கப்பட்டு, குணமடைந்த பிறகு நான் எழுந்து சாப்பிட்டேன். அம்மாவிடம் அந்தப் பெண்ணை அழைக்க ஒரு வலுவான தூண்டுதலை உணர்வதாகக் கூறினேன். நான் தொலைபேசியில் அந்தப் பெண்ணிடம் 45 நிமிடங்கள் பேசினேன். கூட்டத்திற்குச் செல்லக்கூடாது என்பதற்கான ஒவ்வொரு காரணத்தையும் அவள் சொல்லிக்கொண்டிருந்தாள். பின்னர் நான் சுகமாகிவிட்டேன் என்று எனக்கு எப்படித் தெரியும் என்று அவள் என்னிடம் கேட்டாள். எல்லாவற்றையும் நாங்கள் முயற்சித்தோம், எனவே கர்த்தராகிய இயேசுவை முயற்சிப்போம் என்று கூறினேன். நான் இரட்சிக்கப்பட்டு சுகமடைந்த பிறகு, மறுநாள் கூட்டத்திற்குச் சென்றேன். அந்தப் பெண்ணைச் சந்தித்தேன். (என் வாழ்க்கையில் நான் அவளை முதன்முதலில் பார்த்தேன்). அவளுக்கு ஒரு ஜெப அட்டை கிடைத்தது. அவளுடைய எண் அழைக்கப்பட்டது, உடனே அவள் நீங்களும் என்னுடன் வரிசையில் வர முடியுமா என்று கேட்டாள். எனவே நானும் சென்றேன். அவள் என்ன செய்ய வேண்டுமென்று என்னிடம் கேட்டாள். எல்லாவற்றையும் மறந்துவிட்டு, இயேசுவை விசுவாசி என்று சொன்னேன். (நானே முந்தைய நாள் இரவில்தான் இரட்சிக்கப்பட்டு குணமடைந்துள்ளேன். ஆனால் அது என்னவென்று எனக்குத் தெரிந்ததைப் போலவே நான் நடந்து கொண்டிருந்தேன்). அவள்தான் வரிசையில் கடைசியாக இருந்தாள். சகோதரன் பிரன்ஹாம் அவளுக்காக ஜெபித்தார். இயேசு அவளைச் சுகமாக்கினார். ஒருவரை யொருவர் பார்த்தபோது நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தோம். தேவனுடைய வல்லமை எங்களை விடுவித்தது என்பதை அறிந்தவுடன் கண்ணீர் எங்கள் கன்னங்களில் வழிந்தோடியது. கிறிஸ்துவைச் சேவிப்பது எவ்வளவு அற்புதம்! கர்த்தர் அற்புதமானவர்! ஜெபத்திற்குப் பிறகு இயேசு எனக்கு ஒரு நல்ல வேலையைக் கொடுத்தார். நான் ஒரு பதவி உயர்வுக்காக ஜெபித்து அதையும் பெற்றுக் கொண்டேன். தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. நான் இரட்சிக்கப்பட்டு சுகமடைந்து ஒரு வாரத்துக்குப் பிறகு, நான் கூட்டத்திற்குச் சென்றேன். (கூட்டத்தின் இறுதிவரை நான் ஒவ்வொரு நாளும் சென்றேன்). ஒரு மனிதன் எங்களுடன் வந்தான். அவன் ஒரு குடிகாரன். என் அம்மாவும் அப்பாவும் எங்களுடன்தான் வந்தனர். சகோதரன் பிரன்ஹாம் பிரசங்கம் செய்து முடித்தபின்பு ஜெப அட்டைகளை வைத்திருப்பவர்களை அழைத்தார். என் தகப்பனார் R 60 என்ற ஜெப அட்டையை வைத்திருந்தார். அழைக்கப்படவேண்டிய வரிசையில் மிகப்பெரிய எண். அதனால் நான் தலைகுனிந்து ஜெபம் செய்தேன். என்னைக் குணமாக்கியது போல அந்தக் குடிகாரனையும், என் தகப்பனாரையும் குணமாக்கி இரட்சியும் என்று ஜெபித்தேன். சகோதரன் பிரன்ஹாம் திரும்பி, ஐயா அங்கே பால்கனியில் உள்ள பெண் உங்களைப் போலவே பிரச்சனையிலிருந்து ஒரு வாரத்திற்கு முன் சுகமானவள். அவள் உங்களுக்காக ஜெபிக்கிறாள்; அவள் வேறொருவருக்காகவும் ஜெபிக்கிறாள்: அது அவளுடைய தகப்பனார், அவரை எழுந்து நிற்கும்படிச் செய்யவும்; நீங்கள் அவரது தலையில் கை வைத்து அவருடைய செவிப்புலனையும் இரட்சிப்பையும் பெற்றுக் கொள்ளும்படியாக ஜெபிக்கவும். நான் சகோதரன் பிரன்ஹாம் கூட்டங்களுக்குச் செல்ல விடுமுறை கிடைக்கும்படி முதலில் எப்பொழுதும் ஜெபம் செய்வேன். ஒவ்வொரு முறையும் அப்படி செல்லும்போது எனக்குப் பயன் கிடைத்தது. அநேக கூட்டங்களுக்குச் சென்றதைக் குறித்து பாக்கியமாக உணர்கிறேன். உண்மையிலேயே தேவனுக்கு நன்றி கூறுகிறேன். தேவன் என் வாழ்க்கையைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார். என் அப்பாவும் எங்களுடன் இணைந்து ஞாயிறு பள்ளி மற்றும் சபைக்கும் வரத்தொடங்கினார். உண்மையிலேயே, நான் கிறிஸ்துவில் ஒரு புதிய ஜீவனைப் பெற்றிருக்கிறேன். 2 கொரிந்தியர் 5:17 "இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின”. ஒரு விஷயத்தைச் சொல்கிறேன், 1952 ஜூலை 11 இரவு முதல் நான் ஒருபோதும் குடிக்க வேண்டுமென்று நினைத்த தில்லை. மேலும் புகைப்பிடிக்கும் பழக்கத்தையும் தேவன் என்னிடமிருந்து அகற்றிவிட்டார். எனவே இப்போது நான் கிறிஸ்துவுக்கென ஆத்துமாக்களை வெல்ல முயற்சித்து, சிறைச்சாலை ஊழியத்திற்கும் வீடற்றவர்களுக்கு உதவும் தொண்டு இல்லங்களுக்கும் செல்கிறேன். கிறிஸ்துவுக்காக நான் எங்கும் சாட்சிகூறும்படி சிறிய சபைகளுக்கும் பெரிய சபைகளுக்கும் செல்கிறேன். ஏனென்றால் அவர் எனக்கு அவ்வளவு அற்புதம் செய்திருக்கிறார். எவ்வளவு நன்றி கூறினாலும், என்னால் அவருக்கு ஒருபோதும் நன்றி சொல்லி முடியாது. "என் வசனத்தைக்கேட்டு, என்னை அனுப்பின வரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்” என்று வேதம் கூறுகிறது. நான் என் பழைய நிலைமையில் இருந்தால், நான் இப்போது செய்வதுபோல் மற்றவர்களுக்குமுன் என்னால் சாட்சி கொடுக்க முடியாது; ஏனெனில் நான் மிகவும் வெட்கப்படுவேன். ஆனால் இப்போது எனக்குள் நான் இல்லை; நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். "நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்" என்று இயேசு சொல்லியிருக் கின்றார். ஒருபோதும் நம்பிக்கையை இழந்துபோகாத ஒரு கிறிஸ்தவ தாய்க்குப் பிள்ளையாயிருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் என் தாய் எங்கள் சுற்றுப் புறத்து ஜனங்களால் பரியாசம் செய்யப்பட்டிருந்தாலும், நம்பிக்கையை விட்டுவிடாமல் இருந்தார்கள். ஆனால் இப்பொழுது எங்கள் வீடு ஒரு மகிழ்ச்சியான இடமாக இருக்கிறது. "சிறைப்பட்டவர்களை விடுதலையாக்க நான் வந்திருக்கிறேன்” என்று இயேசு சொன்னதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தேவனுடைய இரக்கம் மற்றும் அவருடைய அன்புக்காக நான் உண்மையிலேயே அவருக்கு நன்றி கூறுகிறேன். தேவன் என் தாயின் ஜெபங்களைக் கேட்டார்; விடுதலையாக வேண்டுமென்ற என் நேர்மையான இதயத்தைக் கண்டார்; கிறிஸ்துவை என் வாழ்க்கையில் கொண்டு வருவதற்காக அவருடைய தீர்க்கதரிசியாகிய கனம்பொருந்திய சகோதரன் பிரன்ஹாமை ஹம்மண்டிற்கு அனுப்பினார். உண்மையிலேயே எனக்கு மிகப்பெரிய அளவில் கிறிஸ்தவத்தின்மீது மரியாதையும் சகோதரன் பிரன்ஹாம் மீது அன்பும் இருக்கிறது. உண்மையிலேயே அவர் தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசி. நான் விடுதலையாக வேண்டுமென்று விரும்புவதை இயேசு அறிந்திருந்து, அவர் என்னைக் கண்டு புரிந்துகொண்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய நாமத்தைத் துதியுங்கள். இந்தப் புத்தகத்தைப் படித்த நீங்கள் இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்; அவர் அன்று செய்த அற்புதத்தை இன்றும் செய்வார் என்று விசுவாசிக்கவும், முழுமையான சத்தியத்தை (Fullness of the Word) ஏற்றுக் கொண்டு, புதிய பிறப்பை (New Birth) அடைந்து, எடுத்துக் கொள்ளப்படுதலுக்கேற்ற விசுவாசத்தைப் (Rapturing Faith) பெறவும், தேவன் தாமே உங்களுக்குக் கிருபைத் தருவாராக. ஆமென்